பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


பசுமயிர்த் தாவர மண்டைமண் ணுலகின்மேல்
விசும்புப் போர்வையை வீசிய இறைவன்,
ஆவிக் காற்றை அனுப்பினான்; நிலத்தைக்
காயப் படுத்திக் கடலாய் ஆக்கினான்..
கண்பகை யான இருட்டை விரட்ட
விண்ணில் செங்கதிர் விளக்கையும் ஏற்றினான்.
ஓடும் ஆற்றை மேனி மண் உடம்பில்
நாடித் துடிப்பாய் நடத்தினான்; கொத்தாய்ச்
சுவைச்சுளை முட்டை கிளைகளில் வைக்கும்
கருக்கொண்ட மரங்களின் முகத்தி லிருந்து
சிரிப்பு மலர்களைச் சிந்தச் செய்தான்.
வெடித்துக் கிளம்பும் விதைபோல், சிறகை
அடித்துக் கிளம்பும் பறவையைப் படைத்தான்.
மேயும் அழகெனும் விலங்கினம் படைத்தான்.

இப்படிப் பலவும் இயற்றிக் கடைசியில்
நிழற்பாய் விரித்து நிற்கும் மரங்கள்
அடர்ந்தவோர் சோலையில் ஆடவன் ஒருவனைத்
தனிமையிற் படைத்துத் தவிக்க விட்டான்.
உண்ணக் கனியும் ஊற்று நீரும்
அண்டையில் இருந்தும் அத்தனி மனிதன்
வண்டிக் காகக் காத்திருப் பவன் போல்
எதையோ எண்ணி எதிர்பார்த் திருந்தான்.

ஓய்ந்த நெஞ்சில் உணர்ச்சியைக் கிளரச்
செய்தித் தாளோ சிறுகதைத் தொகுதியோ
கட்சிச் சண்டையோ கருத்துச் சண்டையோ
ஊரார் வம்போ உள்நாட்டுப் போரோ
இல்லா தொழிந்ததால் இதயஞ் சலித்தான்.
தனிமையைப் போக்கக் கருதிய ஆண்டவன்
புள்ளிமான் படைத்த கைகளால், பெண்ணெனும்