பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29



இளையவர் முதியவர் ஏழையர் செல்வர்
வளையல் வனிதையர், வழங்கக் குறையாத
கல்வியைக் கற்றவர், கல்லாத மற்றவர்,
வல்லவர், நோயால் வாடும் உடம்பினர்,
தீண்டத் தகாதவர் யாவரும் ஒன்றாய்
அரிதின் முயன்று குருதிசிந் தாமல்
பெற்றஇச் சுதந்தரம் பெரும்பே ரிலக்கியம் !

இப்பெரும் போரை ஏற்று நடத்திய
ஒப்பருந் தலைவன் ஒருடைப் பக்கிரி !
வேல்கைக் கொண்டவன் அல்லன் ; மெலிந்த
கோல்கைக் கொண்டவன் ; குமுறிக் கிளம்பும்
குண்டுப் போருக் குரியவன் அல்லன் ;
தொண்டுப் போருக் குரியவன் ; கொல்லும்
கத்தியைக் கையில் ஏந்த மறுத்துச்
சத்தியம் ஏந்திச் சாதிக்க வந்தவன் !
உண்ணா விரதமும் தன்னல மறுப்பும்
அண்ணலின் பெரும்படை அணி வகுப்புகள் !

அணிவகுப் போய்ந்தது ; அவன் தந்த வெற்றிக்
கனிக்குலை இந்தியர் கரங்களில் உள்ளது.
பலாப்பழம் போன்ற பருத்ததோள் மறவர்
விழாத்தரு கின்றனர் ; வெற்றிக் களிப்பில்
கன்னியர் தங்கள் கன்ன மேடையில்
புன்னகை யென்னும் புதுவிளக் கெடுத்தனர் ;
வண்ணக் கொடிகள் வாங்கிய சுதந்தர
விண்ணில் சிறகை விரித்துப் பறந்தன.