பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ ச் சி லி லை
நா க ரி க ம்

மெரிக்கப் பாராளு மன்றத்தில் 1964-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 19-ஆம் நாள் குடியுரிமை மசோதா (Civil Rights Bill) சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. இச்சட்டம் உருப்பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கியவர் மறைந்த மாவீரர் ஜான் எஃப் கென்னடி. 1962 ஆம் ஆண்டு நிறவெறியை எதிர்த்து வானொலியில் ஒரு சொற்பொழிவாற்றினார் அவர். அச்சொற் பொழிவின் கவிதை யுருவமே இது.

தூணொன்று சரிந்துவிட்டால் விண்ணை முட்டும்
தூயமணி மாளிகையே சரிந்து போகும்
ஆணவத்தால் தனியொருவன் உரிமை தன்னை
அழிக்குங்கால் நாட்டுரிமை அழிந்து போகும்
வீண்பெருமை பேசுகிறீர் ; ஒரி னத்தை
வேதனையில் தள்ளுகிறீர் ; கறுப்பர் என்று
நாணமின்றிப் பேசுகின்றீர் ; தலையும் தோளும்
நடமாடும் கால்களினை இகழ்தல் போலே.