பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


ஒட்டகத்தைப் போல் முகத்தான், சுதந்த ரத்தின்
உயரத்தைக் காட்டுதற்கு நமது நாட்டில்
கட்டிவைத்த சிலையைப்போல் உயர்ந்திருந்தோன்.
கண்ணீர்க்குத் துணை நின்ற கருணை லிங்கன்
பட்டாளத் துணையுடனே இந்த நாட்டில்
பஞ்சைகள் மேல் படர்ந்திருந்த அடிமை வேரை
வெட்டிவிட்டான் ; ஆனாலும் அவர்கள் வாழ்வில்
வேதனை தான் அடியோடு தீர வில்லை,

எங்கெங்கு மேடையுண்டோ, நாம்வி டுக்கும்
ஏவுகணை எதுவரைக்கும் பாய்வதுண்டோ,
அங்கெல்லாம் சுதந்தரத்தின் பெருமை பற்றி
அழகாகப் பேசுகிறோம் ; ஆனால் நாமோ
இங்கிருக்கும் நீக்ரோவர் சுதந்த ரத்தை
எச்சிலிலை ஆக்குகிறோம் ; நிலவெ ரிக்கும்
திங்கட்பெண் வானத்தில் சோரம் போனால்
தெரியாமல் போய்விடுமா உலகத் தார்க்கே?


எம்முறையில் பிறர் நம்மை மதிக்க வேண்டும்
என்றேநாம் இந்நாட்டில் நினைக்கின் றோமோ.
எம்முறையில் நம்மக்கள் கல்வி கற்றே
ஏற்றங்கள் பெறுவதற்கு நினைக்கின் றோமோ.
அம்முறையில் நீக்ரோவர் வாழ்வ தற்கே
அனைத்தையும் நாம் செயல்வேண்டும்; இல்லாவிட்டால்
நம்மையினி உலகத்தார் மதிக்க மாட்டார் ;
நாகரிகர் என்றினிமேல் சொல்ல மாட்டார்.