பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63



எழுத்துவாய்க் கடித மொன்றே
எதிரிகள் குறுக்கி டாத
மொழித்திரை; காத லர்க்கு
முக்காட்டுத் தூது; வார்த்தை
வழித்துணை; கனவுக் காதல்
வரிப்படம்; பேசும் அந்த
எழுத்துவா கனத்தால் அன்றி
என்னுயிர்ப் பயணம் இல்லை.

கடிதத்தை எழுதும் போது
கைகளுக் கின்பம்; பின்னர்
உடையினில் அதைம றைத்தல்,
உம்மிடம் சேர்க்க வேண்டி
இடையினில் ஆள்பி டித்தல்,
ஏவுதல், கடிதம் உம்மை
அடைந்ததா என்று நைதல்
அனைத்துமே துன்ப இன்பம்!

மூளையில் அறிவை நட்டு
முளைக்கின்ற தத்து வத்தைக்
காளையே! நீங்கள் உங்கள்
கடிதத்தில் எழுத வேண்டாம்.
ஏழைநான் விழைவ துங்கள்
இதயத்துப் பேச்சை! நீவிர்
நாளையே அனுப்பி வைப்பீர்;
நல்லநாள் பார்க்க வேண்டாம்.