பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விருந்துக்கு வந்த
விருந்து

ங்கிலப் பெருங்கவிஞன் சேக்ஸ்பியரைப் பற்றியும், அவன் நாடக இலக்கியங்களைப் பற்றியும் எழுதப் பட்ட நூல்களே உலகில் அதிகம் என்று கூறுவர். ஆனால் கார்சிக மறவன் நெப்போலியனைப் பற்றி எழுந்த நூல்கள், தொகையில் அவற்றையும் மிஞ்சி விட்டன. இக்கத்திக் காவலனைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் மொத்தம் 30,000. புரவியிலும் போர்க்களத்திலும். கப்பலிலும் கனகமணி மாளிகையிலும் இருந்து கொண்டு இவன் எழுதிய கடிதங்களின் தொகை 75,000. இவன் மோதற் கடிதம் எழுதுவதிலும் வல்லவன்; காதற் கடிதம் எழுதுவதிலும் வல்லவன்.

1806 ஆம் ஆண்டு, போலந்தின் இதய நகரான வார்சாவில் இவன் நாளோலக்கம் நடத்திக் கொண்டிருக்கிறான்; பசியெடுக்காத அவ்வூர்ப் பணக்காரப் பிரபுக்களை வசியம் செய்ய வயிற்று விழா நடத்துகிறான். அந்த விருந்தில் கண்டெடுத்த மருந்துச் செடி மேரி வலுர்ஸ்கா. அவள் ஒரு பழுத்த பிரபுவின் குருத்து மனைவி.