பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


காலான தந்தத்தூண் கடைசல் மீது
கட்டிவைத்த மொட்டுமலர் மேனிப் பெண்ணே !
மேலான என்பிரெஞ்சு மொழியைப் பாதி
மென்றுவிட்டு நீகுழறி மொழிந்த போது
நாளான மதுச்சாற்றுப் போதை ஏறி
நான்என்னை இழந்துவிட்டேன்; நகைக்கும் உன்கண்
தேளாலே நான் கொட்டப் பட்டேன் ; உன்றன்
திருமேனி மந்திரத்தால் கட்டுப் பட்டேன்.

சித்திரப்பூ மெத்தையின்மேல் செங்கோல் ஆட்சி
செய்யுமிள வரசிகளும், மேடை யாட்ட
முத்திரைப்பொன் நடிகையரும் நான ழைத்தால்
முகம் சற்றும் சுழித்ததில்லை ; ஆனால் நீயோ
நத்தையைப்போல் என்னிரண்டு கடிதம் பட்டு
நாணமெனும் ஒட்டுக்குள் சுருங்கி விட்டாய்.
மத்தாப்புச் சிரிப்பழகி ! உன்றன் மெளன
மறுப்பாலே நெருப்பானேன் எனது மேனி,

இரண்டுமுறை நான்கடிதம் எழுத விட்டேன் ;
இரண்டுகடன் என்னிடத்தில் பட்டுவிட்டாய் !
திரண்டசுவைத் தேனாப்பிள் பழமே ! உன்றன்
திருவாயில் நானூறு கடன்கள் பெற்று
வறியவனாய் மாறுதற்கு விரும்பு கின்றேன் ;
வள்ளலுனைப் போற்றுகின்ற தன்றி வேறு
தெரியாமல் ஏங்குகின்ற என்மேல், காதல்
தேன்துளிகள் ஒன்றிரண்டு தெளித்தால் என்ன?