பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


மலர்ச் செடிகள் இதில் நிரம்பியிருந்த காரணத்தால் மொகலாய மன்னர்கள் இப் பெயரை இதற்குச் சூட்டினர். இப்பூங்காவில் அருவி யொன்று மேலிருந்து கொட்டுவதற்காகக் கல்லினால் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சி யொன்றும் காணப்படுகிறது.

இந்நிலவொளிப் பூங்காவின் ஓரத்தில் அமைந்த மாடி ஒன்று உள்ளது. உயரமான இம் மாடியின் பெயர் ஷாபர்ஜ் என்பதாகும். மொகலாய மன்னர்தம் அந்தரங்க அமைச்சர்களுடனும் அலுவலர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும் இடம் இதுவே. கி. பி. 1787 ஆம் ஆண்டு மொகலாய மன்னன் ஷா ஆலத்தின் மூத்த மகனான சிக்கந்தர்பக்த் டில்லியிலிருந்து தப்பி ஓடுவதற்காக இம்மாடியின் மீதிருந்தே கயிற்றினால் கட்டி இறக்கப்பட்டான். இம்மாடியின்மீது அமைந்துள்ள முற்றம் இரண்டாம் அக்பர் ஷாவினால் கட்டப்பட்டதாகும்.

மொகலாய மன்னனின் பட்டத்தரசி குடியிருக்கும் இடம் பொதுவாக ஜெனானா என்று அழைக்கப்படும். ஜெனானாவில் ரங்மகல் என்ற ஒரு மாளிகை உள்ளது. வண்ண மாளிகை என்பது இதன் பொருள். இம்மாளிகையின் கலையழகு போற்றத் தகுந்தது. ஆனால் இம்மாளிகை பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் போதிய கண் காணிப்பின்மையால் சிதைவுற்றது. இந்த ரங்மகலுக்கு அருகில் மற்றொரு மாளிகையும் காணப்படுகிறது. அது இப்போது பொருட் காட்சி நிலையமாகப் பயன்படுகிறது.