பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஆலின் உச்சியில் அழகாக அமைக்கப்பெறும் காக்கைக் கூடும் பறவைகளுக்கு இயற்கை வழங்கிய பேராற்றலின் விளைவுகள். நாரினாலும், குச்சியினாலும், வைக்கோலினாலும் அமைக்கப்பட்ட இக்கூடுகளைப் பார்த்துத்தான் இன்று மாந்தன் வைக்கோற் பலகைகள் (Straw Boards) செய்யக் கற்றுக் கொண்டான்.

நிலத்தினடியில் பெருஞ்சுரங்கங்களை அமைத்து அங்குப் பெரும் நகரத்தையே அமைக்கிறோம். அமெரிக்க நாட்டிலும், உருசிய நாட்டிலும் நிலத்தினடியில் ஒடும் சுரங்க வண்டித் தொடர்கள் (Metro Trains) நிறைய உண்டு. அவற்றின் சிறப்பைக் கண்டு வியவாத வெளி நாட்டார் இலரென்றே சொல்லலாம். இக்கலைக்கு முன்னேடிகளாக இருந்தவை எலிகளே! பொறியியற் கல்வியில் மண்ணியற்கலை (Soil Mechanism) என்ற தனித் துறையே உண்டு. இத்துறையைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இத்துறையின் முதல் ஆசான் யார்? இறைவன் படைப்பில் இழிந்ததாகக் கருதப்படும் எலியே அன்றோ?

அமெரிக்க நாட்டில் நூற்றுக்கணக்கான மாடிகளையுடைய மாபெருங் கட்டடங்கள் விண்ணை அளாவி நிற்கின்றன. இக்கட்டடங்களை எழுப்பிய சிற்பிகளை வியந்து பாராட்டுகிறோம். ஆனால் மரக் கிளையில் தொங்கும் தேனடையைக் காணும் போது, சிற்பிகளின் பேராற்றல் நமக்குச் சிறிதாகத் தோன்றும்.