பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தொடர்பும் இல்லை என்பது நம்முடைய நம்பிக்கை. ஆனால் பண்டைய எகிப்தியரின் கொள்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஒருவன் இறந்தவுடன் அவனுடைய ஆவி, மறு உலகம் செல்வதில்லை யென்பதும், அவனுடைய உடலையே சுற்றிக் கொண்டிருக்கும் என்பதும் அவர்களுடைய கொள்கை. ஆவி பிரிந்ததும் உடல் அழிந்துவிடும் என்று நாம் கருதுகிறோம். அவர்கள் அவ்வாறு கருதவில்லை. உடல் உலகில் எதுவரை அழியாமல் இருக்கிறதோ, அதுவரை ஆவிக்கும் அதற்கும் தொடர்புண்டு என்று கருதினர். உடலின் ஒரு பகுதி அழிந்தால் ஆவியின் ஒரு பகுதி அழிகின்றதென்றும், உடல் முழுதும் அழிந்தால் ஆவியும் அடியோடு அழிந்து விடுகின்றதென்றும் அவர்கள் நினைத்தனர். எனவே உடலை அழியாமல் பாதுகாத்தால், ஆவியையும் அழியாமல் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கருதினர்.

உடலை எவ்வாறு அழியாமல் பாதுகாப்பது என்பதைப்பற்றி அவர்கள் சிந்தித்தனர்; ஒரு விதத் தைலத்தைக் கண்டுபிடித்தனர். அத்தைலத்தில் பிணத்தைப் போட்டுப் பதப்படுத்தினர். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட சடலங்கள் நான்காயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்றும் அழியாமல் இருக்கின்றன. அவ்வுடல்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவர்களது அடுத்த கடமையாயிற்று. அதற்காக மாபெரும் பிரமிடுகளை எழுப்பி அவற்றுக்குள் அவ்வுடல்களை வைத்து மூடினர். பிரமிடு எகிப்தியர்களின் குறிக்கோளாக மாறிவிட்டது.