பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

வைக்கக் கூடாது என்று கச்சை கட்டி நின்றனர் அராபியர்; கி.பி. 712 இல் முகம்மது பின் காசிம் என்ற வீரன் தலைமையில் கடலைக் கடந்து சிந்து நாட்டில் காலடி எடுத்து வைத்தனர். சிந்து நாட்டின் மன்னான தாகிர் கொல்லப்பட்டான். சிந்து நாடு அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. சிறிது காலமே அவ்வாட்சி நிலைபெற்றது; பிறகு செத்து மடிந்தது.

மீண்டும் பத்தாம் நூற்றாண்டில் இசுலாமியர் இந்திய நாட்டின் மேல் தம் படை வெள்ளத்தைத் திருப்பினர். இப்போது இவர்கள் கடல்வழியாக வரவில்லை ; கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்திய நாட்டிற்குள் நுழைந்தனர். அவ்வாறு நுழைந்தவன் கஜ்னி நகரை ஆட்சி புரிந்த சபக்டிஜின் என்ற மன்னன். இவன், செயபாலன் என்ற இராசபுத்திர மன்னனைத் தோற்கடித்துப் பெஷாவர் வரையிலுமுள்ள பகுதிகளைக் கைப்பற்றினான். ஆனால் சில நாட்களில் அவனும் செத்து மடிந்தான். அவனுக்குப்பின் அவன் மகனான மாமூது காட்டாற்றைப்போல் இந்தியப் பெருநிலத்தில் புகுந்தான்.

இந்திய வரலாற்றில் கொடுமையின் சிகரமாகக் குறிக்கப்படும் கஜ்னி மாமூது என்ற குருதி வெறிக் கோமான் இவனே. இவனே ஒரு காட்டுத்தீக்கு ஒப்பிடலாம். காட்டுத்தீ, பற்றிய இடத்தையெல்லாம் சாம்பலாக்குவது போல, இவன் காலடி வைத்த இடமெல்லாம் சுடுகாடாக்கினான். இந்திய நாட்டின் வளமிக்க நகரங்களெல்லாம் இவன் வாள்வீச்சுக்குச் சரிந்தன.