பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87


அமைந்துள்ளது. கிரேக்கர்களின் இசைக் கடவுளான ஆர்பியசையே (Orpheus) அவ்வாடவனின் உருவம் குறிப்பிடுகிறது என்று கூறுகின்றனர். கி. பி. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் (Soldiers' Mutiny) என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் முதல் உரிமைப் போரின்போது, இச்சிற்பம் இம்மாளிகையினின்றும் பெயர்த் தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலத் தலைமை ஆளுநராக இந்தியாவிற்கு வந்த கர்சன் பிரபு இலண்டன் மாநகரில் அச்சிற்பத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் இம்மாளிகையிலேயே கொண்டு வந்து பொருத்தினார். கோடை நாட்களின் வெப்பத்தைத் தணிப்பதற்காக இவ்வத்தாணி மண்டபத்தைச் சுற்றிச் செந்நிறத் திரைகள் தொங்கவிடப்படும். அத்திரைச் சேலைகள் தொங்கவிடப் பொருத்தப்பட்ட வளையங்களை இன்றும் அங்குக் காணலாம்.

திவானீ ஆம் என்று சொல்லக் கூடிய இம்மாளிகையின் இடப் புறத்தில் ஒரு பாதை செல்லுகிறது. இப்பாதையின் முகப்பில் ஒரு வாயில் உள்ளது. இவ்வாயிலைச் செந்நிறத்திரை மறைத்துக் கொண்டிருந்த காரணத்தால் 'செந்திரை வாயில்' (லால் பர்தா) என்று இது அழைக்கப்பட்டது. அரசரின் நன்மதிப்பைப் பெற்ற பெருமக்களே இவ்வாயிலுக்குள் நுழைய முடியும், அவர்கள் 'லால் பர்தாரிகள்' என்று அழைக்கப்பட்டனர். லால் பாதாரிகள் மொகலாய அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்கள்.