பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மனைவி போன்று இன்றி, அருளே அவனுக்குரிய மனைவியாக உள்ளாள் என்பது தான் உண்மை நூல்களின் துணிபாகும். “ஆனா அருள் தன்னைத் தானாக இருத்திய தையல்” என்ற கச்சியப்பர் வாக்கைக் காண்க. இங்ஙனமே இறைவனுக்கு மக்களும் இலர். மக்கள் இருப்பவராகக் கூறுதல் உலகமக்கள் போல நடித்துக் காட்டும் நடிப்பே அன்றி வேறன்று.

ஒருபொருளின் உயர்ச்சியை அறிவிக்க மற்றொரு பொருளை உவமை தருதல் இயல்பு. அவ்வுவமை உபமேயத்தைப் போலச் சிறப்புடையதாகவோ, அன்றி அதனினும் சீரியதாகவோ இருக்கும் இயல்புடையது. அந்த முறைக்கிணங்க இறைவனுக்கு எதிராக ஒரு பொருளை ஒப்புமை கூறச் சிந்திக்கும்போது ஒன்றும் புலனாகாது; அவனுக்கு ஒப்புக் கூறவும் இயலாது. அதனால் தான் செந்நாப்போதார் “தனக்குவமை இல்லாதான்” என்று இறைவனைக் கூறிப்போந்தனர்” இதனை அடியொற்றியே அழுது அழுது அரனடிக்கு அன்பு பூண்ட மாணிக்கவாசகரும் “ஒப்புனக்கு இல்லா ஒருவனே” என்று உளம் மகிழ உரைத்தருளினர். அப்பர்பெருமானாரும் “ஒப்புடையன் அல்லன் ஓர் உவமன் இல்லி” என்று கூறியிருப்பனவற்றையும் ஈண்டு நினைவுகொள்வோமாக.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழுக லான்” என்று வள்ளுவரே அந்தணர் என்ற சொல்லுக்குப் பொருள் கூறிப் போந்தனர் ஆதலின், அவ்வந்தணப் பண்பின் மூலகாரணர் இறைவர் என்பதை நமக்கு நாயனார் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இறைவனை “அந்தணன்” என்று கூறி அறிவுறுத்திவிட்டனர். அவ்வந்தணன் பின்னால் நீத்தார் பெருமையில் கூறப்பட்ட அந்தணரினும் ஒருபடி வேறானவன்