பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஆற்று மணல் போன்ற கூந்தலும், பிறைமதி போன்ற நெற்றியும் வில்போன்ற புருவமும், குளிர்ந்த கண்களும், செந்நிற வாயும், முத்தன்ன பற்களும், குழை அணிந்த காதுகளும், குனிந்த கழுத்தும், மூங்கில் போன்ற தோளும், முன்கையும், காந்தள் மலர் போன்ற விரல்களும் கிளிமூக்கன்ன நகங்களும், நீர்ச் சுழி போன்ற கொப்பூழும் நுண்ணிய இடையும், யானையின் தடக்கை போன்ற திரண்ட தொடைகளும், நாயின் நாப்போன்ற பாதங்களும் உடைய பாடினி என அப்பாடினியைச் சித்திரத்தில் எழுதிக்காட்டு வார் போலக்காட்டி இருக்கும் இச்சொல் ஓவியத்தைக் காணும் தோறும், எத்துணை இன்பம் பயக்கின்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! செம்மையும், பசுமையும், வெண்மையும், கருமையும் முதலான வண்ணங்களைச் சொல்லால் சித்திரித்துக் காட்டும் திறனை என்னென்றும் இயம்புவது! இவ்வடிகளையே உவமை நயத்திற்கு எடுத்துக்காட்டாக இயம்பலாம். நகத்திற்குக் கிளிவாயும், விரல்கட்குக் காந்தள் மலரும், சீறடிக்கு நாயின் நாவும் எத்துணைப் பொருத்தமான உவமைகள் என்பதை இயம்பவும் வேண்டுமோ?

இனி, இப்பத்துப் பாட்டின்கண் நாகரிக நயத்திற்கு இரண்டோர் இடங்களைச் சுட்டிக்காட்டி, இக் கட்டுரையினை இனிதின் முடிப்போமாக. “இக்காலத்தில் வாழும் மாதர்கள் தாம் எதற்கும் முன்னணியில் நிற்கவல்லவர். இதோ பாருங்கள்! இம் மாதராள் உந்து (Motor Car) வண்டியினை மொய்ம்புடன் விடு கின்றனள். இம்மங்கையினைக் காணுங்கள்! எத் துணை வீரமான செயல்களைச் செய்கின்றனள்! இத்துணையும் மேனாட்டு நாகரிகம் நம் நாட்டில் புகுந்த பின்னரே நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்” என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். அன்னார் நம் தொன்னூல்களைக் காணாத் தொகுதியினர் என்று கூறாது