பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


அதற்குப் போர்வையாக ஈவதே பொருத்தமானது என்று உறுதி கொண்டான். அவ்வாறே தான் மேலே அணிந்திருந்த பீதாம் பரத்தினை அத்தோகைக்கு இத்தோன்றல் ஈந்து உள்ளம் மகிழ்ந்தான். இதனைப் பாராட்டிப் புலவர்கள் பாடிய பாட்டுக்கள் மிக மிக அருமைப் பாடுடையன ;

உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்சைக்கு, ஈத்த எங்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

என்பதும்,

மடத்தகை மாமயில் பனிக்கும் என்றுஅருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்இசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக

என்பதும் பரணர் பாட்டு,

வானம் வாய்ந்த வளமலைக் கவாஅன்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

என்பது சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் பாட்டு.

இங்ஙனம் மயிலுக்குப் படாம் அளித்துத் தன் மாளிகைக்குச் சென்று. அன்று தான் செய்த அரும்பெருஞ்செயல் குறித்து அகங்களி கொண்டனன். ஈந்து உவக்கும் இன்பம் அவாவுபவன் ஆதலின், அவன் செயல் குறித்து அவனே இத்துணை மகிழ்ந்தனன்.

பேகன் பண்டம் மாற்றுப் போலத் தன் பொருள்களை இரலர்களுக்கு ஈந்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறவேண்டும் என்று எண்ணுபவன் அல்லன். எத்துணையாயினும் ஈதல் நன்று என எண்ணும் மனப்பான்மையன். இவன் தான்