பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

வைத்திருப்பதனாலும் ஒருவாறு உணரலாம். சோழ பாண்டியர்கள் தம்மை, முறையே சூரிய மரபினர், சந்திர மரபினர் என்று கூறிக் கொள்ளுதற்கேற்பச் சேரர்கள் தம்மைத் தீக்கடவுள் மரபினர் எனச் செப்பிக்கொள்ளும் சிறப்பு வாய்ந்தவர்கள். இதனை வில்லியார் தம் பாரதத்தில், இவன் “செந்தழலோன் மரபாகி ஈரேழுலகம் புகழ்சேரன்” என்று குறிப்பிட்டிருத்தல் கொண்டும் நன்கு உணரலாம்.

இச் சேரமரபினர் பாரத காலத்திலும் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்தவர்; கௌரவ பாண்டவர்கள் போரிட்டபோது அவர்கள் படைகள் சோர்வுறாதிருக்க உண்டி கொடுத்து ஊக்கமூட்டிய உதியஞ் சேரலாதன் செயலால் இதனைத் தெள்ளெனத் தெளியலாம். இதனைப் புறநானூறு என்னும் புராதன நூல் “ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்று கூறி மகிழ்கிறது. சோர் புகழ்களையே செப்புதற்குரிய நூல் பதிற்றுப்பத்து என்னும் பெயரால் இன்றும் இருப்பதிலிருந்தும் இம் மரபினர் அருமையையும் பெருமையும் நன்கு அறியலாம்.

இன்னோரன்ன சீரும் சிறப்பும் வாய்ந்த சேரர் குடியில் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னன் இற்றைக்குச் சற்றேறக்குறைய 2000 ஆண்டுகட்கு முன்னர், சேரநாட்டு மன்னனாய்த் திகழ்ந்துவந்தனன். இமய வரம்பன் என்னும் அடைமொழி, இப்பெருவேந்தனது வடநாட்டு வெற்றியை அறிவிப்பதாகும். இதனால், இமயம் வரை சென்று ஆண்டுளாரை வென்று மீண்டு அன்னதற்கு அறிகுறியாகத் தன்குலக் கொடியாகிய விற்பதாகையினை இமயத்து நிலை நிறுத்தி மீண்டான் என்பதும் புலனாகிறது.