பக்கம்:கட்டுரை வளம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 கட்டுரை வளம்

மேலும், இப் பகுதி ஓர் உவமையாய் எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பதனையும் அறிதல் வேண்டும். ‘தலைவன் வரைவு நீட்டித்தானாக, அதனால் தலைவி குறித்து ஊரில் அலர் எழ, அப்பொழுது தலைவன் தமரொடு வரையும் நோக்கத்தோடு தலைவி வீட்டிற்கு வர, அதனால் இதுவரை அலர் பேசிய வாய்கள் தாமாகவே மூடிக்கொண்டன என உவமேயப் பகுதியின் விளக்கம் செல்கின்றது. இதனால் உவமைகூறி விளக்கும் அளவிற்கு இராமகாதைக் குறிப்புகள் நாட்டில் பரவியிருந்தன என்பது புலனாகின்றது. ‘தெரிந்த பொருளால், விளக்கப் படுவதன்றோ உவமை? மேலும் புறநானுாற்றில் மற்றோர் உவமையிலும் இராமகாதைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. வறியவரான புலவர் ஒருவர், தம் குடும்பத் துடன் சென்று சோழவேந்தன் ஒருவனைக் கண்டு, அவனாற் பெரிதும் விருந்தோம்பப்பட்டுத் திரும்பும் பொழுது அணிகலன் முதலிய பல பரிசுகள் அளிக்கப் பெற்றார். வள்ளல் வழங்கிய அணிகலன்களை முறை தெரியாமல் எளிய புலவரின் குடும்பத்தினர் தம் உறுப்பு களில் மாற்றி மாற்றி அணிந்தனர். அது பொழுது அரசவை யில் பெருநகை விளைந்தது. இக்காட்சியினை விளக்க அப்புலவர் கையாண்ட உவமை இராமசரித நிகழ்ச்சிகளு ளொன்றாகும். இராவணனால் நிலத்தொடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சீதாபிராட்டி இடைவழியில் போட்ட அணிகளை வானரர்கள் கண்டெடுத்து, அவற்றை அணியும் முறை அறியாமல் தடுமாறி, விரலணிகளைச் செவியிலும், செவியணிகளை விரலிலும், அரையணி களைக் கழுத்திலும், கழுத்தணிகளை அரையிலுமாக மாற்றியணிந்தனர் என்று இராமகாதைச் செய்தியினை உவமைப்படுத்தியிருப்பது காணலாம். வேறு நூல்களில் காணப்படாத இவ்வரிய செய்தியினைத் தன்னகத்தே

கொண்டிருக்கும் புறநானூற்றுப் பாடல் வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/100&oldid=1377371" இலிருந்து மீள்விக்கப்பட்டது