பக்கம்:கட்டுரை வளம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

121

 “தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”

-திருக்குறள் : 68 ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்’

-திருக்குறள் : 69. இது போன்றே, கடவுளராய் இருந்தாலுங்கூடக் குழந்தை வடிவமே - கோலமே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கண்ணனுடைய விளையாட்டுகளை எண்ணி மகிழாத குழந்தைகள் உண்டா? முருகனின் குழந்தைக் கோலமாம் பழனியாண்டி'யைப் பாராட்டி மகிழாத குழந்தைகள் உண்டா? எனவே, மனிதர் மட்டுமன்றிக் கடவுளரும் குழந்தைக் கோலத்திலேதான் சிறப்பாகப் பேசப்படுகின்றனர் என்பது இதனால் நமக்கு நன்கு புலனாகிறது.

முதலில் பிள்ளைத்தமிழின் அமைப்பினைக் காண்போம். புலவர்கள் தாம் விரும்பும் ஒர் அரசனையோ, அல்லது ஒரு பெரியாரையோ, அல்லது ஒரு தெய்வத்தையோ குழந்தையாக எண்ணி, அக்குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் இருபத்தோராம் மாதம் வரையில் உள்ள மாதங்களைப் பத்துப் பருவங்களாக வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பத்து விருத்தப் பாடல்களை அமைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்று கூறப்படும். இஃது ஆண்பாற் பிள்ளைத் தமிழ் என்றும், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்றும் இரு பிரிவாக வழங்கப்படும். ஆண்பாற்பிள்ளைத் தமிழ் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர்’ என்னும் பத்துப் பருவங்களை விளக்குகிறது. பெண்பாற்பிள்ளைத் தமிழ், இவற்றில் முதல் ஏழு பருவங்களையும் பொதுவாகக் கொண்டு இறுதியில் அமைந்துள்ள மூன்று பருங்களுக்குப் பதிலாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/123&oldid=1382634" இலிருந்து மீள்விக்கப்பட்டது