பக்கம்:கட்டுரை வளம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 கட்டுரை வளம்

பயிர் செய்வேம்’ என்கிறார். இவ்வாறெல்லாம் சட்ட மன்றங்களிலே பேச வேண்டிய வேலைகளைத் தாமே எடுத்து மொழிகின்றார் மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள் (Poets are unacknowledged legislators of fine world Shelly)-அல்லவா ?

நாட்டு விடுதலைப் பாடல்களில் கவிஞர் உணர்வின் இமயமாய் விளங்குகிறார். என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?’ என்ற வினாவினை எழுப்பி, மக்கள் மனத்தில் சுதந்திரக் கனல் கொழுந்துவிட் டெரியச் செய்கிறார். ‘தொண்டு செய்யும் அடிமை! உனக்குச் சுதந்திர நினை வோடா?’ என்று ஆங்கிலேயன் பாரத மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்பது போல எண்ணி, அதற்கு மறு மொழியாகச் சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்’ எனறு மார் தட்டிப் பேசுகிறார். “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?’ என்று கூறி, எத்தனை இன்னல்கள் வந்துற்றாலும் சுதந்திர தேவியைத் தொழு திடல் மறக்கிலேன்’ என்கிறார். புன்மைத் தொழிலாம் அடிமைத் தொழில் செய்த காலம் கழிந்தொழிந்தது; தொல்லை இகழ்ச்சிகள் தீர்ந்தன. புதிய பாரதத்தினைக் காணவேண்டும். அதற்கு மக்கட்குத் தேவையான அடிப் படைப் பண்பு யாது? அதுவே ஒற்றுமை. அந்த ஒற்றுமை என்ற மட்டும் அமைந்துவிட்டால், பிறகு வாழ் வின் முன்னேற்றத்திற்கு வேறொன்றும் தேவையில்லை. இதனைப் பாரதியார்,

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே. நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?”

-தேசிய கீதங்கள், வந்தே மாதரம் : 4

என்று இடித்து அறிவுரை கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/142&oldid=1382191" இலிருந்து மீள்விக்கப்பட்டது