பக்கம்:கட்டுரை வளம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம்

13



‘பல்கால் பழகினும் தெரியா உளவேல்

தொல்காப் பியம் திருவள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும்'


எனத் தமிழ் அறிவார் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் நூலாகத் தொல்காப்பியத்தைச் சுட்டியுள்ளார் எத்தனையோ இலக்கண நூல்கள் தமிழில் பிற்காலத்தில் எழுந்திருப்பினும் பொருட் பெருக்கத்துடனும், செறி வுடனும், தெளிவுடனும் முறைப்பட நிரலே கூறிய நூல் பிறிதொன்றில்லை எனலாம்.

தொல்காப்பியனார் என்னும் பெயர் நூலாசிரியரின் இயற்பெயரே என ஒரு சாராரும், பிற்காலத்தே ஆசிரியர் பெயர் மறந்துபோகத் தாம் எழுதிய நூல்வழித் தொல்காப்பியனார் எனத் தம் பெயர் பெற்றார் எனப் பிறிதொரு சாராரும் கூறுவர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களாகிய இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பியனார் என்னும் பெயருக்குப் பழமையான காப்பியக் குடியில் பிறந்தோர்’ எனப் பொருள் கூறியுள்ளனர். 'காப்பியத் தொல்குடிக்கவின் பெற வளர்ந்து' என்று சிலப்பதிகாரத்தில் வரும் தொடர் கொண்டு, இவர் பிறந்த குடி காப்பியக் குடி என்பர். ஆயினும், ‘செய்தானாற் பெயர் பெற்றன அகத்தியம் தொல்காப்பியம் என இவை’ என இறையனார் களவியல் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி கொண்டு. தொல்காப்பிய நூலின் ஆசிரியர்தம் இயற் பெயர் தொல்காப்பியனார் என்பதே எனத் துணியலாம். இவர், பிற்கால நன் னுால் உரைகாரர் மயிலைநாதரால் ‘ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்’ என வழங்கப் படுகின்றார். ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்ற தொடருக்கு உரை எழுதப்புகுந்த உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், ‘பழைக்காப்பியக் குடியில் உள்ளோன்' எனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி’ எனப் பாயிரவுரைக் கண் குறிப்பிட்டுள்ளார். அறிஞர் சிலர், தொல்காப்பியனார் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/15&oldid=1253020" இலிருந்து மீள்விக்கப்பட்டது