பக்கம்:கட்டுரை வளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம் 19

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல் பிழந்து கடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’

-சிலப், காடுகாண் காதை : 64-66

என்று குறிப்பிட்டுள்ளார்.

காட்டில் முல்லையும், மலையில் குறிஞ்சியும், வயலருகே மருதமும், கடலருகே நெய்தலும் பெருகச் சிறப்பாக வளர்தல் பற்றி, அந்நிலங்களுக்கு முறையே ‘முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்’ எனப் பெயரிட்ட னர். பாலைக்குத் தனி நிலம் இன்றாயினும், வேனிற் காலத்தும் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலை என்னும் பெயருடைய மரம் உண்டாதற் சிறப்பு நோக்கிப்பாலை எனப்பட்டது.

பொழுது, ‘பெரும் பொழுது’, ‘சிறு பொழுது’ என இருவகைப்படும். ‘கார், கூதிர், முன்பனி, பின்பணி,

இளவேனில், முதுவேனில் எனப்பெரும்பொழுது ஆறு வகைப்படும். ஆவணி புரட்டாசி கார்காலம்’ என்றும், “ஐப்பசி கார்த்திகை கூதிர்காலம்’ என்றும், மார்கழி தை முன் பனிக் காலம்’ என்றும், ‘மாசி பங்குனி பின் பனிக் காலம்’ என்றும், ‘சித்திரை வைகாசி இளவேனிற் காலம்’ என்றும், ‘ஆனி ஆடி முதுவேனிற் காலம்’ என்றும் கூறப்படும். சிறுபொழுது, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பன வாகும். கார் காலமும் மாலைப்பொழுதும் முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதுமாகும். கூதிர் காலமும் இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி என்னும் பெரும்பொழுதுகளும் நண்பகலும் பாலைக்குரியன. ஆறு பெரும் பொழுதுகளும், வைகறை விடியல் என்ற சிறுபொழுதுகளும், மருதத்திற்கு உரியன. அது போன்றே ஆறுபெரும் பொழுதுகளும் எற்பாடும் நெய்தலுக்குரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/21&oldid=1256250" இலிருந்து மீள்விக்கப்பட்டது