பக்கம்:கட்டுரை வளம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 கட்டுரை வளம்

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’

-தொல். மரபியல். 27

இவ்வாறு பொருள் அதிகாரம் நமக்கு அரிய பல செய்திகளை அறிவுறுத்துகின்றது. தொல்காப்பியத்திற்குப் பின் சில இலக்கண நூல்கள் தோன்றியிருப்பினும் தொல் காப்பியம் இன்றளவும் வழக்கும், வாழ்வும், புதுமையும் கொண்டு துலங்குகின்றது. மேலும் தொல்காப்பியம், இலக்கணத்தைச் செம்மையான முறைப்பாட்டுடனும் வரம்பின் உறுதிப்பாட்டுடனும் தெளிவுற விளக்குகின்றது, இன்றைய மொழி நூலார் (Linguists) வியக்கும் வண்ணம் பல அரிய மொழியியற் கருத்துகளைப் பொதித்து வைத் துள்ளது.

பழந்தமிழர் நாகரிகத்தினைப் பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ்வாங்கு வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியிணை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப்பெருநூல் இது. எனவே இதனைக் கழிந்துபோன பழங்காலத்தின் பெருமை யினை உணரவைக்கும் காலக் கண்ணாடி எனலாம். தமிழினத்தின் பரந்துட்ட பண்பாட்டுப் பெருமையினைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத் தினைக் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. எனவே தொல்காப்பியத்தினைத் தமிழர், தம் விழுமிய சொத்தாக எண்ணிப் பாதுகாப்பார்களாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/26&oldid=1371275" இலிருந்து மீள்விக்கப்பட்டது