பக்கம்:கட்டுரை வளம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

தமிழ் இலக்கிய உலகம் இன்பம் பயக்கக் கூடியது; பண்பை ஊட்டக் கூடியது; ஆராய்ச்சிக்கு இடமளிப்பது; வாழ்க்கைக்கு வழி காட்டி நிற்பது. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியச் சோலையில் மலர்ந்த மலர்கள் எண்ணற்றவை; அவ்வளவும் நறுமலர்கள். அவை அனைத்தும் நறுமணம் வீசி நல்லின்பம் பயப்பனவாகும். நித்த நித்தம் புத்தம் புது மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் வண்ணத் தமிழ்ப் பூங்காவில் மனத்தைப் பறிகொடுத்து நின்றபோது என் சிந்தனையில் முகிழ்த்தெழுந்த ஆழ்ந்த சில கருத்து களைக் கட்டுரை வடிவில் அவ்வப்போது தொகுத்து அமைத்து வந்தேன். சொற்பொழிவுகள் சிலவும் கட்டுரைகளாய் உருப்பெற்றன. அனைத்தையும் திரட்டி ஒரு நூலாக்கி, அந்நூலினுக்குக் ‘கட்டுரை வளம்’ என்ற தலைப்புத் தந்துள்ளேன்.

இந்நூலின்கண் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள், வற்றாத வளமான இலக்கிய இன்பத்தை வழங்கி நிற்பனவாகும். வளமான கற்பனை, வற்றாத உணர்ச்சி, உணர்ச்சி வெளியீட்டிற்கு ஒத்த வடிவம், இவற்றின் உள்ளீடாகச் சிறந்த கருத்துகள்—இவையே தமிழ்க்கவிதைகள். இத்தகு செஞ்சொற் கவிதைகள் தீட்டிக் காட்டும் சொல்லோவியங்கள் சிலவும் என் கருத்தைப் பிணித்தன. ‘என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே’ என்பது புறப்பாட்டின் தொடர். என் நெஞ்சத்தில் நீங்காது இடம் பெற்றிருக்கும் இலக்கிய ஓவியங்களும் காட்சிகளும் கட்ரைகளாய் உருப் பெற்றுள்ளன. இந்நூலினைத் தமிழ்கூறு நல்லுகம் ஏற்று ஆதரிக்கும் என்னும் நம்பிக்கையுடையேன்.

சென்னை-29
19-6-66.

சி பா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/5&oldid=1371572" இலிருந்து மீள்விக்கப்பட்டது