பக்கம்:கட்டுரை வளம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தின் பண்பும் பாகுபாடும்

7

உணர்ச்சிக்கு ஒரு கலை வடிவம் தந்து, கற்பனை மெருகிட்டு, தான் பெற்ற பேற்றினை - இன்பத்தினைப் - பிறரும் பெறும் வண்ணம் தருகின்றான். இவ்வாறே இலக்கியம் பிறக்கின்றது. எனவே, மனத்தின் இயல்பையொட்டிக் கால வெள்ளத்தின் போக்கினையொட்டி இலக்கியங்கள் பிறந்தவாறே உள்ளன. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்'க் காலத்தின் கூறுகளையெல்லாம் தன்னுட் கொண்டு எழுகின்றது இலக்கியம். சுருங்கக் கூறின், மொழியின் துணைகொண்டு தன்னுடைய கருத்துகளைப் பிறரும் அறியும் வண்ணம் உண்டாக்கும் நூலினை அறிவு நூலாகவும், மொழியைக் கொண்டு தன் உள்ளத்தில் ஊறிக்கிளர்ந்தெழும் உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாக்குமாறு செய்விக்கும் நூலினை இலக்கிய மாகவும் கொள்ளலாம். ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்ற திருவள்ளுவர் குறளுக்கிணங்கப் படிக்கும் தோறும் நயம் தந்து உணர்ச்சி வேகமும் உருவ அமைப்பும் கொண்டு இலங்குவதே இலக்கியமாகும்.

இலக்கியத்திற்கு வடிவம் (Form) இன்றியமையாதது என்பதைக் கண்டோம். அது போல்வது தான் பொருளும் (Content) என்பதையும் உணர்தல் வேண்டும், இலக்கியம கருத்தொன்றும் செய்தியொன்றும் வெளிப்படுத்தவில்லையேல், அஃது இலக்கியமாகாது என்பர்.[1] எனவே இலக்கியம், அமைப்பு (வடிவம்) நோக்கிச் சில வகையாகவும், பொருள் நோக்கிச் சில வகையாகவும், புலவர் தம் கருத்து-மன நிலை-நோக்கிச் சில வகையாகவும், பகுபாடு செய்யப்படுகிறது.


  1. For evidently, whatever else literature may be” communication it must be; no communication no literature. –L. Abercrombie, Principles of Litarary Criticism,P.24.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/9&oldid=1252860" இலிருந்து மீள்விக்கப்பட்டது