பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணிந்துரை

திரு மணவை முஸ்தபா அவர்கள் அறிவியல் தமிழ் வளர்ச்சியைத் தமது வாழ்க்கை நோக்கமாக உள்ளங்கொண்டு, இது காறும் அரிய பல அறிவியல் நூல்களைத் தமிழில் படைத்துள்ளார். அதன் வழியே 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' என்னும் இந்நூலையும் திட்டமிட்டு இயற்றியுள்ளார். இது ஒர் அரிய பணியாகும்.

வளர்ந்து வரும் இக்கணினி உலகில் பலர் ஆங்கிலத்தில் சொல்லகராதிகளை வெளியிட்டு வரும் இத்தருணத்தில், தமிழுக்கு ஆக்கம் சேர்க்க தமிழில் ஒரு கணினிச் சொல்லகராதி தயாரிக்க விழைந்து, அதனை ஒரு கலைக் களஞ்சியமாக விரிவுபடுத்தி எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் உரிய விளக்கமுடன் சிறப்பாக உருவாக்கி இருப்பது போற்றத்தக்கது. இந்நூற்றாண்டில் அறிவியலைத் தமிழில் கொண்டு வரும் பணியில் இது சிகரமாகத் திகழ்கிறது. தமிழில் கணினிக் கல்வி பயில் வோருக்கு இது துணைவனாகவும், தமிழில் கணினி நூல்கள் வெளிவர இது ஓர் அடித்தளமாகவும் அமையும் என்பதை எண்ணி இந்நூலாசிரியரைக் கணினித் தமிழ் ஆக்கத்துக்கு வித்திட்டவர் எனலாம்.

சாதாரணமாகக் கணினி செயற்பாட்டு உள்ளீடுகளை Hardware, Software என இரு கூறுகளாகப் பிரிப்பார்கள். Hardware என்பதனை 'வன்பொருள்'என்றும் 'உருப்பொருள், இயங்கு பொருள்' எனவும் குறிப்பிட்டுள்ளார். Software என்பதனை 'மென்பொருள்' என்றும் 'கணினிச் செயல்முறை' என்றும் குறிப்பதுடன் 'வன்பொருள் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது' என்று அதன் செயல்பாட்டையும் தெரிவித்துள்ளார். அத்துடன் நில்லாமல் Hardware என்னும் சொல்லுடன் இணைந்து பயன்பாட்டில் உள்ள Hardware Configuration போன்ற 12 இணைச் சொற்களுக்கும் மொழி பெயர்ப்புடன் விளக்கமும் தந்திருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

11