பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூறுபாடு கணினியின் உறுப்புகள், அம்சங்கள், செயல்பாடுகள் பற்றிய விளக்கம் அதாவது அகராதி - களஞ்சியம் இவற்றின் தொகுப்பு. இந்த ஏற்பாட்டினால், நூலின் பயன் பன்மடங்கு அதிகரிக்கிறது.

நண்பர் மணவை முஸ்தபா கணிப்பொறித் துறையினர் அல்லர். அவரது கல்லூரிப் படிப்புத் துறை வேறு. இந்த நூலை அவர் என்னிடம் தந்தபொழுது நான் சற்று வியந்தேன். அவருடைய பின்னணியில் இப்படி ஒரு நூலை எவ்வாறு எழுத முடிந்தது என நான் வினவியபொழுது இதற்காக உட்கார்ந்து இரவும் பகலுமாகப் படித்துத் தன்னை அணியமாக்கிக் கொண்டு இப் பணியைத் துவங்கியதாகக் கூறினார். என் மனத்திற்குப் பட்ட அளவில் கலைச் சொல்லாக்கப் பணியில் அவருக்குத் துணை நிற்கும் வலுவான பின்னணி ஒன்று உண்டு. அது அவர் 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து UNESCO நிறுவனம் முப்பது மொழிகளில் நடத்தும் COURIER என்ற திங்கள் இதழின் ஆசிரியராக இருப்பதுதான்.

கூரியர் இதழ், மாதம் ஒரு பதிப்பு. கல்வியுலகில், பண்டைக்காலம் தொட்டு நாளை மலர இருக்கும் நூற்றாண்டு வரை என்னென்ன தலைப்புகள் இடம் பெற முடியுமோ அத்தனை தலைப்புகளையும் இந்த இதழ் தாங்கி வந்திருக்கிறது. அதில் ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை, கால் நூற்றாண்டுக்கும் அதிகமாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடர்ந்து, தொய்வின்றி, உருவிலும் கருவிலும் சிறப்பாக வெளியிட்டு வருகிறார். இது ஒர் இமாலயப் பயிற்சி. விலை கொடுத்துப் பெற முடியாத அறிவுலக அனுபவம். அதன் ஒளி தான் அவருக்குக் கலைச்சொல் உலகின் நெடுஞ்சாலை மட்டுமன்றி, சந்து, பொந்துகளில் நுழையவும் கரடு, முரடான பாதைகளில் தடைகளைத் தாண்டவும் துணை செய்திருக்கிறது.

கலைச் சொல்லாக்கம் கூட்டல், கழித்தல் போன்று வரையறுக்கப்பட்ட வழியைக் கொண்டதல்ல. பல உத்திகள் தேவைப்படும் பணி. 1985இல் 'அறிவியல் தமிழ்’ என்ற தலைப்பில் நான் எழுதிய நூலில் கலைச் சொல்லாக்கப் பணியின் பரிமாணங்கள் பற்றியும் சில உத்திகள் பற்றியும்

19