பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விவரித்திருக்கிறேன். நண்பர் மணவை முஸ்தபா இந்தப் பிரச்சினையை முப்பதாண்டுகட்கும் மேலாகச் சந்தித்திருக்கிறார். தேவைக்கேற்ப அவ்வப்பொழுது தீர்வு கண்டிருக்கிறார். அந்த நீண்ட அனுபவத்தின் தொகுப்பு, அவருக்கு இந்தப் பணியில் கை கொடுத்திருக்கிறது.

இயன்ற அளவில் தமிழ்ச் சொற்களைக் கண்டிருக்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் தமிழ்ச் சொல் என்ற அணுகுமுறையை அவர் பின்பற்றவில்லை. உலக வழக்கை ஏற்று, ஆங்காங்கு ஒலி பெயர்த்திருக்கிறார். தேவைக்கேற்ப, இயல்வது, இயலாதது தெளிந்து, புதிய சொற்கள் படைப்பதையோ, மொழி பெயர்ப்பதையோ, ஒலி பெயர்ப்பதையோ பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குவதையோ மேற்கொண்டிருக்கிறார். இறுக்கமான அணுகு முறையைத் (Rigid Approach) தவிர்த்து, எடுத்த பணிக்குப் பழுது வராத இளக்கத்தைக் (Flexibility) கடைப் பிடித்திருக்கிறார். தமிழறிவும், அறிவியல் அணுகு முறையும் இணைந்து துணை செய்திருக்கின்றன.

பரவலாகவும், மிகவும் விரைவாகவும் வளர்ந்து வரும் முக்கியமான ஒர் அறிவுத் துறையில், தமிழ் மொழியில் இன்றியமையாது தேவைப்படுகின்ற, கற்போர், கற்பிப்போர், கணிப்பொறி பற்றி எழுதுவோர், கணிப்பொறியைக் கையாள்வோர் அனைவருக்கும் பயன்படுகின்ற ஒரு தரவு நூல் தொகுப்பைத் தந்திருக்கிறார் திரு மணவை முஸ்தபா. தமிழ் மொழிக்குக் காலத்தால் செய்துள்ள பணி சிறிதன்று, பெரிதும் கூட. நண்பர் மணவை முஸ்தபா அவர்கட்குத் தமிழகம் தவறாது நன்றி கூறும்.எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சென்னை - 41

வா.செ.குழந்தைசாமி

25 - 10 1999

தலைவர்
தமிழ் இணையப்பல்கலைக்கழக
உயர்நிலை ஆய்வுக் குழு


20