பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆங்கில மொழியில் கணினித் துறைக்கென எத்தனையோ அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்திய மொழிகளில் இதுவே முதலாவது நூலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தமிழ்நெட் - 99 மாநாட்டின் தொடர்ச்சியாக கணித்தமிழ்ச் சொல்லாக்கத்துக்கென ஒர் உட்குழு அமைக்கப்பட்டது. தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களும் கணினித் தமிழறிஞர்களும் கலந்து கொண்ட இக்குழுக் கூட்டங்களில் தமிழ்ச் சொல் செயலி (Word Processor) களில் பயன்படுத்தக் கூடிய சொற்களைப் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் இறுதி செய்யப்பட்டு இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தக் கணினி அறிவியலுக்கான சொல்லாக்க முயற்சிகள் தொடர வேண்டுமென முடிவெடுக்கப் பட்டது.

தமிழ்நெட்-99 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலெடுத்துச் செல்லும் முகமாக, வரும் 2000ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் 'தமிழ் இணையம் 2000 மாநாடு கூட இருக்கிறது. அம் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய குறிக்கோள் களில் கணித் தமிழ்ச் சொல்லகராதியை உருவாக்கும் பணியும் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சி களுக்கு திரு மணவையாரின் இக் கலைச்சொல் களஞ்சிய அகராதி முன்னோடியாக இருந்து வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. இணையத்தில் தமிழ் தகவல் தளங்களை நிறுவி யுள்ள அறிஞர்கள், நிறுவனங்கள் இச்சொல்லகராதி முழுமை யையும் இணையத் தளத்தில் இருத்தி உலகெங்கிலுமுள்ள கணித் தமிழறிஞர்களுக்கு ஒரு சொடுக்கில் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கோரிக்கை. தமிழ்நாடு அரசும் இதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் தலையீடு இருக்குமெனில் கணித் தமிழ்ச் சொல்லாக்கத்தைத் தரப்படுத்தும் பணி எளிதில் விரைவில் நிறைவேற வாய்ப்புண்டு. அதற்கு இந்நூல் அடிப்படையாய் அமையும்.

சென்னை-80, 25-9-1999

இவ்வண் மு. சிவலிங்கம்