பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொற்களை உருவாக்கவியலாது. மேலும் அதற்கென அளவுக்கதிகமான பொறுமையும் இடையறா முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் மட்டுமே இப்பணியைச் செவ்வனே செய்ய முடியும். இக்கடும் பணியை மேற்கொண்டு நூல் எழுத பெரும்பாலான அறிவியல் நூலாசிரியர்கள் தயாரில்லை.

தமிழ்க் கலைச் சொல்லாக்கப் பணியில் குறிப்பாக அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்கப் பணியில் எப்போதும் எனக்குத் தணியா தாகம் உண்டு. காரணம் தமிழில் "எதெல்லாம் இல்லையோ அதெல்லாம் தமிழுக்கு வரவேண்டும். காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழுக்கு எதெல்லாம் இன்றியமையாத் தேவையோ அவற்றையெல்லாம் தமிழில் காண்டு வந்து சேர்க்க வேண்டும். எதையெல்லாம் தமிழால் முடியாது எனக் கூறப்படுகிறதோ அதையெல்லாம் தமிழால் முடியும் என்பதைச் சொல்லால் அல்லாமல் செயலால் எண்பிக்க வேண்டும்" என்ற முக்கோணக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு, கடந்த நாற்பதாண்டுகளாக இலட்சியப் பயணம் மேற்கொண்டு வரும் நான், விரைந்து வளர்ந்து வரும் கணினித் துறை வளர்ச்சிக்கேதுவாக, கணினிக் கலைச் சொல்லாக்கப் பணியில் முழுமூச்சாக ஈடுபடலானேன்.

தமிழில் கணினிக் கலைச் சொற்களைத் தந்தால் நூலெழுதுவோர் சொல்லாக்கப் பணிக்கென நேரத்தைச் செலவிடாது நிரல் நிரையாகத் தங்கள் கணினித் தமிழ் நூல்களை எழுதலாமே. செங்கல் முதலான கட்டிடச் சாமான்கள் இருந்தால் கட்டிடம் எளிதாகவும் விரைவாகவும் கட்டி முடிக்கப்படுவது இயல்புதானே.

இக்கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதிப் பணி செவ்வனே முடிந்திருக்கிறதென்றால் அப்பெருமை முழுமையும் தமிழையே சாரும். தமிழால் இயலவில்லை எனில் இப்பணி நிறைவேறியிருக்கவே முடியாது. ஆனால் தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக அறிவியலைச் சொல்லுவதற்கென்றே உருவான மொழியாக அமைந்திருக்கிறது என்பது நான் கடந்த அரை நூற்றாண்டாக கண்டுணர்ந்து, தெளிந்துள்ள உணமையாகும். தமிழின் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சி மட்டுமே எங்க்ளுடையது. தமிழைப் புகழத் தெரிந்த அளவுக்கு அதன் ஆற்றலை அறிந்துணர நாம் முற்பட்டதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

என் முயற்சி இனிது நிறைவேற துணை நின்ற நண்பர்களையெல்லாம் இச்சமயத்தில் மிகுந்த நன்றியுணர்வோடு நினைவு கூர்கின்றேன். என் தமிழ் வளர்ச்சித் தொடர்பான முயற்சிகளுக்கெல்லாம் எப்போதும் பின் துணையாயிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்பவர் திரு இரா. நடராசன் அவர்கள். என் கல்லூரி வகுப்புத் தோழரும் கூட. அவரது ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்

6