பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணனின் திருக்கதை

இறை வாக்கு

 "உலகில் அறமும் நீதியும் நிலை குலையும்போது இறைவன் அவதரித்துத் தீயவர்களை ஒறுப்பான்; தூயவர்களை வாழ்விப்பான்” என்று தெய்வ நூல்கள் கூறுகின்றன. யுகங்கள் மாறுகின்றன; மாந்தர் அகங்களும் மாறுகின்றன; கிரேதா யுகம் வந்தது; அசுரர்களின் அழிவுகள் அதிகம் ஆயின, அறநெறிகள் அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன; அவர்களை நல்வழியில் நிறுத்திய பாதைகளும் விலகிவிட்டன.
 பூமித்தாய் பூச்சுமை பொறுக்க முடியாமல் படைத்தவனை அடைந்து, தன் துயரத்தைத் துடைத்து அருளுமாறு வேண்டினாள். படைப்புக் கடவுளாகிய பிரமனும் இந்திரனையும், சந்திரனை முடியில் தாங்கிய சிவனையும் அழைத்துக்கொண்டு முத்தொழிலிலும் வல்ல வித்தகன் ஆகிய திருமாலிடம் சென்றான்; தம் குறைகளை நவின்றான்.
 தேவர்களின் குறைகளைக் கேட்ட மாதவன் ஆகிய திருமால் அவர்களுக்குக் காப்பு அளித்தான்; மீனமாய், ஏனமாய், ஆமையாய், வாமனனாய், இராமனாய் வந்து உதித்தவன் கண்ணனாய் உருத்தரிக்கக் கருத்துக் கொண்டான்.
 கடந்த அவதாரமாகிய இராமவதாரத்தில் திருமால் இராமனாய்ப் பிறந்தார்; ஆதிசேடன் இலக்குவனாய்த் துணைவன் ஆனான்; அவனுக்குக் கீழ்ப்படிந்து அடியவனாய் இருந்து இராமனது மிடிமையைத் தீர்த்து வைத்தான். அதனால் திருமால் கடன்பட்டார்; எனவே அவனுக்குத் தம்பியாகப் பிறத்தற்கு உடன்பட்டார்; அரவு அணையாசிய ஆதிசேடனைத் தனக்குத் துணையாகப்