பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇109



என்ன செய்வது என்று வீமனுக்கு வழி தெரியவில்லை. கண்ணனைப் பார்த்தான். அவன் ஒரு தருப்பைப்புல்லை எடுத்துச் சரிபாதியாய்க் கிழித்து அத் துண்டுகளை இடம் மாற்றித் தலைகீழ் வைத்துக் காட்டினான். கண்ணன் காட்டிய குறிப்பை அறிந்து வீமன் செயல்பட்டான்.

சராசந்தன் உடலை இருபாதியாகக் கிழித்து அக்கூறுகளை இடம்மாற்றி வைத்தான்; அவை கூடவே இல்லை; அதற்கு முன்னால் அவன் எப்படி அழித்தாலும் உயிர்போகவில்லை. அதோடு சராசந்தன் சரித்திரம் முடிந்தது. இதற்குக் காரணம் யாது?

அவன் தந்தை குழந்தை இல்லாமல் ஒரு முனிவரை அணுக, அவர் ஒருகனியைத் தந்து தனக்கு விருப்பமான மனைவியிடம் தருமாறு கூறினார். அவன் தன் மனைவியர் இருவர்பாலும் நிகரான அன்பு செலுத்தியதால் அவர்களுக்குச் சரிபாதி தந்தான்; அவர்களும் சரிபாதி குழந்தை களாக இருதனிக் கூறுகளைப் பெற்றனர். அவற்றை மதிலுக்கு வெளியே தூக்கி எறிந்து விட்டனர். பிணந்தின்னும் சரை என்ற அரக்கி அவற்றை எடுத்துப் பார்த்தாள்; இரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்த்தாள்; அவை ஒட்டிக் கொண்டன. முழுக் குழந்தையாகிக் குரல் கொடுத்து அழுதது. இஃது அரசனின் மகனாய் இருக்க வேண்டும் என்று கருதி அதன்பால் மதிப்பும், மரியாதையும் காட்டினாள்: அரசர் இல்லில் விட்டுவிட்டுச் சென்று விட்டாள். சரையால் அவன் சந்து செய்விக்கப் பட்டதால் சராசந்தன் என்ற பெயர் அவனுக்கு உண்டாகியது.