பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇111



கண்ணனுக்கு அவன் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தன. அதனால்தான் அவனை இதுவரை நேருக்கு நேர் எதிர்க்காமல் தள்ளி வந்தான். ருக்குமணியைக் கடத்திச் சென்றபோது ஒருமுறை அவன் எதிர்த்துப் பின்னடைந்து இருக்கிறான்.

பாண்டவர்கள் நடத்திய இராசசூய யாக வேள்விக்குச் சிசுபாலனும் அழைக்கப்பட்டிருந்தான். கண்ணன், துரியோதனன், வீடுமன், கிருபன், விதுரன், மற்றும் உள்ள பெரியவர்களும், உறவினர்களும் வந்திருந்தனர். முதற்பூசை ஏற்பதற்குத் தகுதி யாருக்கு என்ற வினா எழுப்பப்பட்டது. தருமன் கண்ணனையே முதற்பூசை ஏற்குமாறு வேண்டினான். யாரும் அதற்குஎதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. "அவன்தான் தலைவன்; முதன்மையன்; மதிப்பில் உயர்ந்தவன்” என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது; துரியனும் வாய் திறக்கவில்லை.

சிசுபாலன் எழுந்தான். குருகுலத்துக்கு இடையர் குலத்தவன் தலைவன் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "செங்கோல் ஏந்தும் அரசர்க்கு வெறுங்கோல் ஏந்திப் பசுக்களை மேய்க்கும் இடையனா தலைவன்? கோபியருடன் கோலாகல வாழ்க்கை நடத்திய கோவிந்தனா அரசர்க்குத் தலைவன்? சிறையில் பிறந்தவன் ஒரு குற்றவாளி அல்லவா? அவனுக்கு எப்படி உயர்வு தரலாம் ? கோபியரை அவன் மயக்கிவிடலாம்; கோவேந்தரை ஏமாற்ற முடியாது" என்று அவன் பிறப்பையும், குடியையும், ஒழுக்கத்தையும் தொடர்ந்து இழித்துப் பேசினான்.