பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇11


காட்டிய பரிவில் நாசம் தொடங்கியது; அவன் கண் சிவப்பில் மண் சிவக்கும் நிலை ஏற்பட்டது. கற்றைக்குழல் பிடித்து அவளைக் கல்தரையில் சாய்த்தான். "நீயா எனக்குத் தங்கை? என்னைக் கொல்ல வந்த வேங்கை!" என்று கூறி, வாள் எடுத்து வெட்டக் கை எடுத்தான்; வசுதேவன் செங்கை அதனைத் தடுத்து நிறுத்தியது.

 பற்றி எரியும் நெருப்பை அறிவு என்னும் நீரால் குளிர வைத்தான். "ஆறுவது சினம்; மாறுவது மனம்; சீற்றம் உன்னைக் கூற்றம் ஆக்குகிறது; வேற்றவரை அழித்தாய்; மாற்றலரை மறுத்தாய், உற்றாரை உறவினரை மட்டும் இதுவரை செற்றது இல்லை; இத் தங்கை உன் அங்கை அதனை நீயே அழிக்க நினைக்கிறாய்; பெண் கொலை; ஏலாது உன் நிலை; தீய எண்ணத்தைக் கலை, அழிப்பது எளிது; ஆக்குவது அரிது; அழிக்கும் ஒர் உயிரை உன்னால் ஆக்க இயலுமா? சிந்தித்துப் பார்; பழிக்கும் வினை உன்னைப் பாழ்நரகில் சேர்க்கும்.”
 “நானோ, என் மனைவியை இழக்கின்றேன்; என்றாலும், மற்றொருத்தி கொண்டு நிரப்பிவிடுவேன். நீயோ, தங்கையை இழக்கின்றாய்; இன்னொருத்தி உன் தங்கை ஆக முடியாது. பானையை உடை, குயவனை நோகாதே; எட்டாம் மகன் உனக்குப் பகை, இவளைக் கொல்வது மிகை, உலகம் காட்டும் நகை; இஃது உன் தகைக்கு ஏற்றது அன்று. பூவைப் பறிப்பவர் வேரை அழிப்பது இல்லை; காயைப்பறி; அதன் மரத்தை வெட்டாதே" என்றான்.
 அவன் பேசியது அதிமதுரச் சுவையாய் இருந்தது: அறிவுச் சுமையாகவும் இருந்தது. பொறுத்தவர் பூமி ஆள்வார். அந்தப் பொன்மொழி அவனைத் தடுத்து நிறுத்தியது. அவர்களைக் காவலில் வைத்தால் தன் ஏவலில் அடங்குவர் என்று தீர்மானித்தான்; "குழந்தை பிறந்தால்