பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇23



வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஓரளவு உண்மையாகியது. செவிகளில் கண்ணனது ஒவ்வோர் அசைவும் நாத ஒலியாய்க் கீதம் எழுப்பியது.

 அன்னை மடி மற்றவர் கடியும்போது அவன் தங்கும் படியாய் அமைந்தது. யாராவது கடிந்து பேசினால் உடனே படிந்து உள்ளே வந்து அம்மாவின் முதுகுபுறம் புல்குவான். கோபியர் கண்ணன் செய்யும் குறும்புகளை விரும்பி ஏற்றனர். அரும்பிய முல்லை என அவற்றை ஏற்றுக் கொண்டு இங்கு வந்து யசோதைக்கு மணம் பரப்பினர். ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டிச் சொல்லியே அவர்கள் கூட்டல் கணக்குக் கற்றுக் கொண்டனர்.
 "கண்ணனும் அவன் அண்ணனும் விடியற்காலையில் எழுந்து விடுகிறார்கள். கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விட்டு அவற்றின் தாயோடு முட்ட விடுகிறார்கள். அவை பால் குடித்துவிட்டபின் கறப்போர் வந்தால் பால் கொடுக்க மறுத்துவிடுகின்றன."

"யாரும் இல்லாத வேளைகளில் புகுந்து இருவரும் வெண்ணெய் திருடித் தாம் மட்டும் உண்ணாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறார்கள்; குரங்குகள் அவர்கள் பங்காளிகள் ஆகின்றன."

"உறிகளில் உயரமான இடத்தில் வைத்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அவற்றை உருட்டி விட்டுத் தின்னும் அளவு தின்றுவிட்டு அங்கேயே கொட்டி வைத்துக் கட்டித் தயிரால் மெழுகி வைக்கின்றனர்."

"கட்டெறும்பு ஒன்று இரண்டைக் கன்றின் காதில் விட்டு அதனை விரட்டி வைத்து வேடிக்கை பார்க்கின்றனர்." - இவற்றைக் கண்டு வந்து மங்கையர் சிலர் யசோதையிடம் சங்கு ஊதினர்.