பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇39


நாகமும் அதுவே தனக்கு ஏற்றது என்று நாள் கணக்கில் தங்கி இருந்த இடத்தைவிட்டு அகன்றது.

இது கண்ணன் ஊருக்குச் செய்த பொதுச் சேவை யாதலின் அனைவரும் அதனையே பாராட்டிப் பேசினர். பிருந்தாவனமும் குடிக்க நீர் வசதி பெற்று உயர்வு அடைந்தது.

பிரலம்பாசுரனைப் பிணமாக்கியது

தேனுகாசூரன் இறந்த பின்பு அப்பனங்காடு அவ் ஆயர் சிறுவர் ஆடும் இடமாக மாறியது. இருவரும் பாண்டீரகம் என்கிற ஆலமரத்து அருகே மற்றவர்களோடு பல் வகை விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தனர். கண்ணன் பொன்னிற ஆடையும் பலராமன் அவனுக்குப் பிடித்த நீல நிற ஆடையும் உடுத்தி இருந்தனர்.

பிரலம்பன் என்பவன் இடையர் சிறுவனாகி அவர்கள் நடுவில் புகுந்து அனைவரிடமும் சிரித்துப் பேசி நட்புச் செய்துகொண்டான். கண்ணனும் அவன் ஓர் அசுரன் என்பதனை அறிந்திருந்தான்; ஒன்றும் தெரியாதது போல் அவனைத் தெரிந்தவன் போல் அவனோடு பழகினான்.

அவர்கள் மான்போல் துள்ளி விளையாடும் ஒர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டு வெற்றி பெற வேண்டியதாய் இருந்தது; இரட்டையராய்த் தனித்தனியே பிரிந்து விளையாடினர்.

ஆடுவது என்றால் இருவருக்குள்ளேயே இதில் போட்டி நடந்தது. யார் முந்திக் கொள்கிறாரோ அவரே வென்றவர் ஆவர். இவ்வாறு ஆடியதில் கண்ணனுக்கு எதிரி தாமன்; பலராமனுக்கு எதிரி இந்தப் புதியவன் பிரலம்பாசுரன். தோற்றவர் வென்றவனைச் சுமந்து செல்ல வேண்டும் என்பது விதியாய் இருந்தது. பிரலம்பாசுரன்