பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46◇ ராசீ



பாம்பு வடிவில் ஒரு வித்தியாதரன் நந்தகோபனும் அவனோடு சிலரும் அம்பிகாவனம் என்ற ஊரில் சரசுவதி நதிக்கரையில் இருந்த சிவன் கோயிலுக்குச் சிவராத்திரி அன்று வழிபடச் சென்றனர். அங்கே அந்த நதிக்கரையில் இரவுப்பொழுது கழித்தனர். அப்பொழுது ஒரு கொடிய மலைப்பாம்பு அவர்களை நோக்கி விழுங்குவது போல நெருங்கி வந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அஞ்சி அகன்றுவிட்டனர். நந்தகோபன் செய்வது தெரியாமல் தன் மகனை நினைத்துக் கொண்டு "கிருஷ்ணா வந்து என்னைக் காப்பாற்று" என்று கத்தினார். எங்கிருந்து வந்தான் என்று சொல்ல முடியாதபடி கண்ணன் அங்கு வந்தான். தடி கொண்டு தாக்கி அதன் உயிரைப் போக்கினான். அதன் வடிவில் இருந்த ஒரு வித்தியாதரன் அழகிய தோற்றத்தோடு காட்சி அளித்தான். கண்ணனுக்கு இது வியப்பாக இருந்தது. "நீ யார்?' என்று கேட்டான். அவன் தன் கதையைக் கூறினான். அவன் கந்தருவ நாட்டில் வாழும் ஒரு வித்தியாதரன். மிகவும் அழகாக இருந்ததால் கர்வம் மிகவும் கொண்டான். அவன் தன் வானவூர்தியில் பல தேயங்களுக்குச் செல்வது வழக்கம், வழியில் ஆங்கிரன் என்ற பெயருடைய ஒரு முனிவன் தவம் செய்து கொண்டிருந்தான். அவன் விகாரவடிவம் இவனை ஏளனம் செய்ய வைத்தது. அவன் அழகின்மையை எள்ளி நகையாடினான். அதனால் கோபம் கொண்ட முனிவன் அவனைச் "சர்ப்பம் ஆகுக" என்று சபித்தான்; அந்தச் சாபம் கண்ணனின் திருக்கரம் பட்டுத் தீர்ந்தது என்று கூறி, அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வித்தியாதரன் தன் நாடு போய்ச் சேர்ந்தான்.