பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கண்ணாயிரத்தின்

கண்ணாயிரம் தனக்கென ஏற்பட்டிருந்த உலக இயல்புடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தால், மனதிலே சிக்கல், சங்கடம் ஏற்பட்டிருக்காது. வாழ்க்கை ஒரு சுவைமிகு விருந்தாகியிருக்கும். அல்லது அவன், தன் உலகின் போக்கிலே வெறுப்படைந்து, அதனைவிட்டு விடுபடவோ, அல்லது அதனை உடைத்திடவோ முயற்சி எடுத்துக் கொண்டிருப்பின், முள்ளும், கல்லும் நிரம்பிய பாதையில் நடந்திட வேண்டி வந்திருக்கும். முள் தைத்திடும், குருதி கசிந்திடும், ஆனால் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி மலர்ந்திருக்கும். கண்ணாயிரமோ, இந்த இருமுறைகளில், எந்த ஒன்றிலேயும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; இருமுறைகளுக்கு ஏற்ற இரு வேறு துறைகளிலும் அவன் இடம் பெற்றிருந்தான்; எதை விடுவது, எதைக் கொள்வது என்பதிலே உறுதி பிறந்திடவில்லை. செல்லுமிடம் எதுவென்ற தெளிவின்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தான். கரும்பையும் கண்டான்; கசப்பையும் கண்டான்; ஆடிப்பாடிடவும் செய்தான்; ஆயாசமடைந்திடவும் செய்தான்.

கண்ணாயிரம் தனக்கென ஒரு உலகினை உருவாக்கிக்கொள்ளவில்லை; தந்தை உருவாக்கி வைத்திருந்த உலகில், 'சுகபோக உலகில்' இடம் பெற்றான். ஆனால் அதிலே இருந்துகொண்டே அவன் வேறு உலகம் பற்றிய நாட்டம் கொண்டிடலானான். இக்கட்டான நிலை என்பது மட்டுமல்ல, கண்ணாயிரம் 'இரு உலக வாசியானான்'-அதுபற்றிய விளக்கக் கதையே நாடக வடிவில் தரப்படுகிறது.

கண்ணாயிரம் இருவேறு உலகில் உந்தப்பட்டும், உறைவிடம் பெற்றும் அலைந்தது மட்டுமே, இங்கு காணக் கிடைக்கும். கடைசியாக அவன் எந்த உலகுக்குத் தன்னை உரியவனாக்கிக் கொண்டான் என்பது கூறப்படவில்லை.

கண்ணாயிரத்தின் உலகம், ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ளத்தக்க இயல்பினைப் பெற்றிடத் துணை செய்யவில்லை என்பதும், இதிலிருந்து பெறத்தக்க பாடங்களில் ஒன்று என்று கூறலாம்.