பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

119

அடப்பாவி! எத்தனை இரவுகள் கண் விழித்தேன்...எண்ணி எண்ணி உருகிக் கிடந்தேன்! சேரிகள் சுற்றினேன்—வறுமைத் தேள் கொட்டியதால் வதைபட்டுக் கிடக்கும் மக்களைக் காண! உரையாடினேன், அவர்கள் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள. மாடாக உழைத்து ஓடாகிப்போன பாட்டாளிகள் படும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்து, நான் வடித்த இரத்தக் கண்ணீரை அல்லவா, என் எழுதுகோலுக்கு மை ஆக்கினேன்...ஐயோ!...

[தலையில் அடித்துக் கொள்கிறான். வேலையாள் அருகே செல்லவே பயப்படுகிறான், கதிர்வேல் நிலையைக் கண்டு. பாரத்பூஷண் ஓசைப்படாமல் வருகிறான். கதிர்வேலுக்குத் தெரியாமல் வேலையாளுக்கு ஜாடை காட்டுகிறான், வரச்சொல்லி. கதிர்வேல், ஆத்திரத்தால் அலறியதால் மயக்கம் மேலிட்டு, படுக்கையில் சாய்ந்து விடுகிறான். வேலையாள் கூடத்தில் இருக்கும் பாரத் பூஷணிடம் வருகிறான்.]

பாரத்: (மெதுவாக) பாவம்! ஜுர வேகத்தால் மூளை குழம்பிவிட்டது. எழுந்து ஓடிவிட்டாலும் ஓடிவிடுவான்...பிறகு உயிருக்கே ஆபத்து ஆகிவிடும்.

வேலை: என்னென்னமோ உளறுகிறாரே!

பாரத்: மூளையிலே கோளாறு ஏற்பட்டால் அப்படித்தான். நான்தான் நாட்டை ஆளும் ராஜா என்றுகூட ஆர்ப்பரிப்பான். ஊரில் உள்ளது எல்லாம் என்னுடைமை என்பான்; கொக்கரிப்பான்.

வேலை: ரொட்டித் துண்டு தன்னுடையதாம்! பதறுகிறான்; கதறுகிறான்.

பாரத்: பரிதாபம்! பரிதாபம்! என்ன செய்யலாம்? கொஞ்ச நாளைக்கு வெளியே விடாமல் உள்ளேயே கட்டிப் போட்டு வைக்க வேண்டும். அடித்து நாசம் செய்து விடுவார்கள் பாவம்! வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு.