பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

53

சிங்: (அமைதியாக) சொன்னேன் நாடியா...சொன்னேன்...நானே அதைச் சொல்லத்தான் நேரில் வந்திருக்கிறேன்.

நாடி: (மேலும் ஆத்திரம் கொண்டு) முடியாது! முடியவே முடியாது! பொய்சாட்சி சொல்லி ஒரு ஏழைக் குடும்பத்துக்குக் கேடு செய்யமாட்டேன்...நான் இழிவான நிலையில்தான் இருக்கிறேன்....

சிங்: (உருக்கம் காட்டி) இழிவான நிலையில் நீ இருப்பது உன் குற்றமல்ல, சமூகம் செய்யும் குற்றம்தான்! காரணம், உன்னைக் காப்பாற்றி நல்வழிப்படுத்த என்னைப்போல ஒருவன் இருந்தால் நீ ஏன் பாவம், இந்தக் கதிக்கு ஆளாகப் போகிறாய்!

நாடி: (கேலிக் குரலில்) உருக்கமாகக்கூடப் பேசத் தெரிகிறதே!... அன்று உருட்டல் மிரட்டல் அபாரமாக இருந்தது.

சிங்: அப்போதும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றத்தான்.

நாடி: (வெறுப்படைந்து) குடும்ப கௌரவம்! நாசமாகட்டுமே, எனக்கென்ன...

சிங்: உனக்கொன்றும் இல்லை. எனக்குக்கூட அதனாலே கஷ்டமோ, நஷ்டமோ இல்லை...கருப்பன் குடும்பம் கெடக் கூடாது என்று நினைக்கிறாயே, அது சிலாக்கியமான குணம். பலருக்கு இருப்பதில்லை; அந்த இளகிய மனம் உனக்கு இருக்கிறது. ஆனால் நாடியா...கோர்ட்டிலே உன் சாட்சியத்தால் எங்கள் குடும்ப கௌரவம் பாழானால். . . ஆயிரக்கணக்கான ஏழைகளின் குடும்பம் நாசமாகிவிடும்...

நாடி: என்னய்யா, மிரட்டிப் பார்க்கிறீர்!

சிங்: குடும்ப கௌரவம் கெட்டால் தொழில் கெடும். தொழில் கெட்டால் அதை நம்பிப் பிழைக்கும் ஆயிரம் குடும்பம் வேலையின்றி அலையும்; அழியும். வா, என்னோடு நேரிலேயே பார்க்கலாம்...பயப்படாமல் வா...என் மகள் போல. . . நீ. . .