பக்கம்:கண் திறக்குமா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O8

கண் திறக்குமா?



‘என்ன தங்கமான குணம்!’ என்று நான் வியந்தேன். அதே சமயத்தில் வண்டிக்காரன் திரும்பிச் செங்கமலத்தன் கழுத்தைச் சந்தேகக் கண்களுடன் பார்த்தான். பிறகு, ‘சரிதான், சரிதான்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

‘என்ன சரிதான்?’ என்று நான் எரிந்து விழுந்தேன். ‘ஒண்ணும் இல்லிங்க, வண்டி ஊருக்குள்ளே நொழைஞ்சிப்போச்சுன்னு சொன்னேன்!” என்று அவன் பேச்சை மாற்றினான்.

அதற்குள், ‘'அதோ பார் அம்மா, அமிர்தம் அத்தை வீடு; நாம் அங்கே இறங்கி விடுவோமா?’ என்றாள் செங்கமலம்.

‘அது என்னமோ, உன் இஷ்டம்’ என்றாள் அவள் தாயார்.

வண்டி அமிர்தம் வீட்டு வாசலில் நின்றது; இருவரும் இறங்கிவிட்டனர். அங்கிருந்து குற்றாலலிங்கம் பிள்ளையின் வீடு சுமார் ஒரு பர்லாங்கு துரத்தில் இருந்தது. நானும் அவர்களுடன் வண்டியை விட்டிறங்கி, அவருடைய வீட்டை நோக்கி நடந்தேன்.

வாசலில் நின்று கொண்டிருந்த மாமா என்னைக் கண்டதும் சிரித்துக்கொண்டே, ‘என்னப்பா, கடைசியிலே வெறுங்கையோடு திரும்பி வந்திருக்கிறாயே?’ என்றார்.

‘என்ன கொண்டு வரவேண்டும் என்கிறீர்கள்?’’ என்றேன் நான்.

‘'சுயராஜ்யத்தை வாங்கிக் கொண்டுதான் திரும்பி வருவாயாக்கும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றார் அவர்.

‘அது என்ன, சிறையில் விலைக்கு விற்கும் என்று நினைத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே நுழைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/111&oldid=1379020" இலிருந்து மீள்விக்கப்பட்டது