பக்கம்:கண் திறக்குமா.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

9

அழகான தமிழ் வார்த்தைகளாகப் பொறுக்கியெடுத்துத் தாக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!

இந்தப் பெரியோர்களின் கட்சிக்குத் தற்கால உலகத்தில் எதுவுமே உவமையாக எடுத்துச் சொல்லக் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு காலத்தில் இந்த உலகத்தில் இருந்து, இப்போது அந்த உலகத்தில் இருக்கிறதாமே அன்னப் பறவை, அதுதான் கிடைக்கிறது. அந்த அதிசயப்பட்சிக்குப் பாலில் தண்ணிரைக் கலந்து வைத்தால், அது தண்ணீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் உறிஞ்சிக் குடிக்குமாம். - பாவம் பால்காரர்கள் பிழைத்துப் போகட்டும் என்று பகவான் இப்போது அவற்றைப் பூலோகத்தில் அவதரிக்க வொட்டாமல் தடுத்துவிட்டாரோ, என்னவோ! - அந்தப் பட்சியைப்போல மனிதனும் யாராவது கெட்ட காரியம் செய்தால் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமாம்; நல்ல காரியம் செய்தால் அதைப் போற்றிப் புகழ்ந்து, ஆடிப் பாடி, ஆரவாரம் கரகோஷம் எல்லாம் செய்து வாழ்த்தி வரவேற்க வேண்டுமாம்.

இது பெருந்தன்மைக்கு அழகாயிருக்கலாம்; தமிழர் பண்புக்கு உகந்ததாயிருக்கலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கு - அதிலும் பணமில்லாத, படிக்காத, படித்தும் பகுத்தறிவில்லாத பாமரர்களின் வாழ்க்கைக்கு - அழகல்ல, உகந்ததல்ல என்பதோடு மட்டுமல்ல; இதை விடக் கேடு விளைப்பது வேறொன்றுமில்லை என்பதை இங்கே சொல்லத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் மற்றவர்கள் சிரத்தை காட்டாமலிருந்தாலும், பொது ஜனங்களின் உப்பைத் தின்று வயிறு வளர்ப்பதற்கென்றே பிறந்திருக்கும் எழுத்தாளர்கள் சிரத்தை காட்டாமல் இருக்கவே முடியாது.

இன்று இவ்வளவு தூரம் எழுதும் நானும் நேற்று வரை மேற்படி திருக்கூட்டத்தைச் சேர்ந்தவனாய்த்தான் இருந்தேன். ஆனால் முதலிலிருந்தே சேர்ந்துவிடவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/12&oldid=1379247" இலிருந்து மீள்விக்கப்பட்டது