பக்கம்:கண் திறக்குமா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

137


அதற்காகச் செய்திருக்கும் தன்னலமற்ற சேவையைப் பற்றித் தன்னடக்கத்துடன் வந்திருந்த பெரிய மனிதரிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அவற்றைக் கேட்டுப் பாரிஸ்டர் எதிர்பார்த்தபடி அவரும் பிரமித்துப் போனார் - ஆம்! உண்மைக்கு வசப்படுவதைக் காட்டிலும் மனிதன் பொய்க்கு அதிகமாக வசப்பட்டு விடுகிறானல்லவா?

இந்த நிலையில் குருகுலம் முழுவதையும் பார்வையிட்ட பிறகு, தமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பெரிய மனிதர் பேசினார். குருகுலச் சிறுவர் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கேட்கும் விஷயத்தைப் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்க்கும் சக்தி அவர்களுக்கு இல்லாவிட்டாலும், எடுத்ததற்கெல்லாம் கரகோஷம் செய்யும் சக்தி மட்டும் அவர்களுக்கு இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பாரிஸ்டர் பரந்தாமனைப் பற்றி வந்திருந்தவர் ஏதாவது சொல்லும்வரை கூட அவர்கள் காத்திருக்கவில்லை; அவருடைய பெயரை எடுக்கும்போதே கை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் - இப்படி ஒரு முறை இரு முறையல்ல; பிரசங்கம் முடியும் வரை அவருடைய பெயர் எத்தனை இடங்களில் வந்ததோ அத்தனை இடங்களிலும் அவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் - எல்லாம் ஏற்கெனவே நடத்தியிருந்த ஒத்திகையின் விளைவு போலும்!

திருவாளர் பரந்தாமனைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்வதற்காக எழுந்த பெரிய மனிதர் இருநூறு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொண்டே போனார். ‘உலகத்தில் பலனை எதிர்பாராமல் கருமத்தைச் செய்யும் மிகச் சில கர்மயோகிகளில் பாரிஸ்டர் பரந்தாமன் குறிப்பிடத்தக்க ஒருவர்!’ என்று அவர் பெருமிதத்துடன் உறுமினார். சர்க்கார் ஆதரவில் நடைபெறும் கல்லூரிகளைப் பகிஷ்கரித்துவிட்டு இம்மாதிரிக் குருகுலங்களில் மாணவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/140&oldid=1379164" இலிருந்து மீள்விக்கப்பட்டது