பக்கம்:கண் திறக்குமா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கண் திறக்குமா?


‘'ஏதேது, இவன் பெரிய அதிகப்பிரசங்கியாயிருப்பான் போலிருக்கிறதே; இவனைப் போன்றவன்களிடத்திலெல்லாம் நீங்கள் சிநேகமே வைத்துக்கொள்ளக் கூடாது, ஸார்! மரியாதை தெரியாத பயல்கள்; பண்பாடு தெரியாத பயல்கள்!’ என்று அவர் மரியாதையையும், பண்பாட்டை யும் சற்றே மறந்து என்னைத் தீர்த்துக் கட்ட ஆரம்பித்து விட்டார்.

‘'மன்னிக்க வேண்டும்; இவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய வேஷத்தை நீங்கள் கலைத்துவிடுவீர்கள் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை!’ என்றேன் நான்.

பாவம், பரந்தாமனார் என்ன செய்வார்? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தார்!

அதற்குள் காரை நெருங்கினார் அவர். டிரைவரைக் காணோம்.

‘'முனிசாமி! ஏய், முனிசாமி!'’

பதில் இல்லை; சற்றுத் துரத்தில் அவன் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கருகே ஒரு சிறுமி தலைவிரி கோலத்துடன் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஏனோ கலங்கியிருந்தன. அவனிடம் அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிசாமியின் காதிலோ பெரிய மனிதரின் குரல் விழவில்லை!

இந்த நிலையில் தம்முடைய காரியம் முடிந்து விட்டதால் பரந்தாமனார் அவரைச் சீக்கிரமாக வண்டியில் ஏற்றி அனுப்பிவிட நினைத்தாரோ என்னமோ, ‘பாம், பாம்’ என்று ஹாரன் அடிக்க ஆரம்பித்து விட்டார். அதைக் கேட்டதும் அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/143&oldid=1379185" இலிருந்து மீள்விக்கப்பட்டது