பக்கம்:கண் திறக்குமா.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

141

“ஏண்டா, நாயே! உனக்காக நான் காத்திருப்பதா, எனக்காக நீ காத்திருப்பதா? - ஏறு வண்டியில்!” என்று அதட்டினார் பெரிய மனிதர்.

“எசமான்! ஒரு சேதிங்க; குழந்தை என்னைத் தேடிகிட்டு வந்திருக்கு. வீட்டிலே இடுப்பு வலியாம்; பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போகப் பத்து ரூபாயாச்சும் கேட்டு வாங்கிகிட்டு வரச்சொன்னாங்களாம். இந்தச் சமயத்திலே நீங்கதான் கொடுத்து உதவணும்; சம்பளத்திலே தள்ளிடறேனுங்க!” என்றான் அவன் கையைப் பிசைந்துகொண்டே.

“என்னை என்ன, லேவாதேவிக்காரன்னு நினைச்சுட்டியா? - சீ, ஏறு வண்டியிலே!” என்று அவன் கழுத்தைப் பிடித்து வண்டிக்குள் தள்ளினார் அவர்.

கார் கிளம்பிற்று. “அப்பா, அப்பா!” என்று கதறிக் கொண்டே அதைத் தொடர்ந்து ஓடினாள் சிறுமி.

பாவம், அவளை இதயம் என்று ஒன்று படைத்திருந்த பெரிய மனிதரும் பொருட்படுத்தவில்லை; இதயம் என்று ஒன்று படைத்திராத காரும் பொருட்படுத்தவில்லை. முனிசாமி மட்டும் கலங்கிய கண்களுடன் திரும்பி, “நீ போம்மா, நான் இதோ வந்துட்றேன்னு சொல்லு!” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.


இந்தக் காட்சி என்னைத் தொட்டது; என் இதயத்தைச் சுட்டது. சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தேன்; பாழும் பணம் என்னைக் கைவிடவில்லை; ‘நானும் மனிதன்’ என்று காட்டிக்கொள்ள ஒரே ஒரு ஐந்து ரூபாய் நோட்டு அதில் இருந்தது. அதை எடுத்து அந்தச் சிறுமியிடம் கொடுத்தேன்; அவள் அதைப் பெற்றுக்கொண்டு ஓடினாள், நான் திரும்பினேன்; அதற்குள் தமது காரில் ஏறி உட்கார்ந்து என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/144&oldid=1379174" இலிருந்து மீள்விக்கப்பட்டது