பக்கம்:கண் திறக்குமா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

145

சிரித்து விட்டோம். நாங்கள் சிரித்தால் இந்த நீலக்கடல் அலைகளுக்கு என்ன வந்ததாம்? அவை ஏன் எங்கள் நெஞ்சின் அலைகளோடு மோதிச் சிரிக்கவேண்டுமாம்?.....

இதற்குமேல் டயரிகளைப் பார்க்க நான் விரும்ப வில்லை ; மூடி வைத்துவிட்டு முகத்தில் அசடு வழியப் பரந்தாமனாரைப் பார்த்தேன். "இப்போது சொல்லும்! சாந்தினி சொன்னபடி நீர் நடந்தது உண்மையா, இல்லையா?" என்றார் அவர். என்றைக்கும் இல்லாத 'உம்'மை அன்று நான் எதிர்பாராத விதமாகப் போட்டு.

"உண்மைதான்; என்னை மன்னியுங்கள்!" என்றேன் நான், தயங்கிய வண்ணம்.

அவர் என்னைத் தட்டிக்கொடுத்தபடி, "சரி, உம்மை நான் மன்னிக்கிறேன்; சாந்தினியை யார் மன்னிப்பது?" என்று கேட்டார்.

"நீங்கள் தான் மன்னிக்கவேண்டும்!"

"அதுதான் முடியாது! தவறுக்கேற்ற தண்டனையை இருவரும் அனுபவித்தே தீரவேண்டும்; இறங்கும் கீழே!" என்றார் அவர்.

அப்பொழுதுதான் அவருடைய வீட்டு வாயிற்படியில் கார் வந்து நின்றிருப்பது எனக்குத் தெரிந்தது; பரபரப்புடன் கீழே இறங்கினேன்.

என் கரத்தை அழுத்திப் பற்றியபடி, "சாந்தினி, சாந்தினி!'" என்று அவர் இரைந்தார்.

"என்ன, அப்பா!" என்று கேட்டுக் கொண்டே அவள் வெளியே வந்தாள்.

"இப்பொழுது சொல், இவரும் நீயும் சேர்ந்து என்னைத் தாத்தாவாக்கச் சதி செய்தது உண்மைதானே!" என்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/148&oldid=1378904" இலிருந்து மீள்விக்கப்பட்டது