பக்கம்:கண் திறக்குமா.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கண் திறக்குமா?

அவ்வளவுதான். என்னை அவள் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை; "போங்கள், அப்பா!" என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள்.

"சரி, முடிந்தது விசாரணை! தண்டனையை ஆயுள் தண்டனையாகவே ஏற்றுக்கொள்ள நீர் தயாரா?" என்றார் அவர் என்னை நோக்கி.

"எங்கள் சதிக்கு நீங்களும் உடைந்தையாயிருந்தால் அவசியம் ஏற்றுக்கொள்கிறேன்!" என்றேன் நான்.


14. "இவர்தான் என் அண்ணா!"

விவரிக்க முடியாத உணர்ச்சியுடனும் பொங்கி வரும் மகிழ்ச்சியுடனும் வீட்டை நெருங்கிய என்னை வேற்றுக் குரல் ஒன்று வேதனையடையச் செய்தது. காரணம், அது பெண்ணின் குரலாயில்லை; ஆணின் குரலாயிருந்தது. அது தான் போகட்டுமென்றால் அந்தக் குரல் செங்கமலத்தினிடமோ, அவளுடைய தாயாரிடமோ பேசிக்கொண்டிருக்கவில்லை; சித்ராவுடன் பேசிக்கொண்டிருந்தது.

இருக்கட்டுமே, அதனால் என்ன? அந்தக் குரல் என்னுடைய மகிழ்ச்சிக்குக் குறுக்கே நிற்பானேன்? என் கால்கள் மேலே செல்லத் தயங்குவானேன்? விசித்திரமாக வல்லவா இருக்கிறது, இது!

நான் மட்டும் கல்யாணத்துக்கு முன்னால் ஒரு பெண்ணுடன் பேசலாம்; பழகலாம்; சித்ரா பேசக்கூடாது; பழகக்கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/149&oldid=1379591" இலிருந்து மீள்விக்கப்பட்டது