பக்கம்:கண் திறக்குமா.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

151

இவ்வளவு தூரம் உதவி செய்த அவருக்கு எப்படி நன்றி செலுத்துவது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை. போகும் போது, 'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!' என்றேன். அப்படியே ஆகட்டும்,' என்றார். அடுத்தாற் போல், யாருக்கும் தெரியாமல் வரவேண்டாம்; தெரிந்தே வாருங்கள்!' என்றேன். அன்று சிரித்துக் கொண்டே சென்றவர்தான்; இன்று வந்திருக்கிறார்!" என்று கூறி முடித்தாள் அவள்.

"ரொம்ப சந்தோஷம்; என் தங்கையின் வார்த்தையைத் தட்டாமல் நீங்கள் இவ்வளவு தூரம் வந்தது பற்றி ரொம்ப ரொம்ப சந்தோஷம்!" என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.

"போங்கள் அண்ணா , நீங்கள் மட்டும் சாந்தினியின் வார்த்தையைத் தட்டாமல் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லையாக்கும்?" என்றாள் அவள்.

"சரி, நான் 'திருடன்' என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீ 'திருடி' என்பதை ஒப்புக்கொள்கிறாயா?"

"வேடிக்கைதான்; யாரை யார் திருடினார்களாம்;"

"அதுதான் எனக்கும் தெரியவேண்டும். நீ அவரைத் திருடினாயா, அவர் உன்னைத் திருடினாரா?"

"இந்த விஷயத்தில் பெண்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வது கடினம்!" என்றார், அதுவரை சும்மா இருந்த அந்த ஆசாமி.

"அப்படியானால் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று நான் திருப்பிக் கேட்டேன்.

அவ்வளவுதான்; முகத்தில் அசடு வழிய எழுந்து அவர் மெள்ள நழுவப் பார்த்தார். நான் அவருடைய கையைப் பற்றி, "உங்கள் பெயர்?" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/154&oldid=1378891" இலிருந்து மீள்விக்கப்பட்டது