பக்கம்:கண் திறக்குமா.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கண் திறக்குமா?

வேண்டும் என்பதுதான்! எதிரி பணக்காரனாயிருக்கலாம்; அதற்காக ஏழை அஞ்ச வேண்டியதில்லை. அவனுக்குப் பணம் துணையாயிருந்தால் இவனுக்குப் பலம் துணையா யிருக்க வேண்டும்!"

"உண்மை ; இறந்த காலப் பலாத்காரந்தானே எதிர்காலத்தில் வீரமாக வர்ணிக்கப்படுகிறது? - அதைப் புரிந்து கொள்ளாமல் அஹிம்சையைப் பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?"

"இருந்தாலும் முதலிலேயே நான் இந்த விஷயத்தில் என்னுடைய பலத்தைப் பிரயோகித்து விடப்போவதில்லை; உன்னைப் போலவே நானும் நேரில் சென்று அவனுக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்வேன். அதற்கு அவன் சம்மதிக்காவிட்டால் சட்டத்தின் துணை கொண்டு நடவடிக்கை எடுப்பேன். அதிலும் நீதி கிடைக்கவில்லையென்றால், அந்த நீதியை வழங்க நான் ஆண்டவனை நாட மாட்டேன்; நானே வழங்கிவிடுவேன்! ஆம், நானே வழங்கி விடுவேன்!" என்று தன் முஷ்டியை உயர்த்திக் காட்டினான் அவன்.

"செய்; அப்படியே செய்! இம்மாதிரி அக்கிரமங்களை ஒழிக்க ஒரு தலைமுறை செத்தால்தான் இன்னொரு தலைமுறையாவது மானத்தோடு வாழமுடியும்!" என்று நான் அவனை உற்சாகப்படுத்தினேன்.

"ரொம்ப சந்தோஷம் செல்வம்; இதனால் நமது நட்புரிமைக்குப் பங்கம் வராமலிருந்தால் சரி!" என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

வீறு கொண்ட அவன் நடை, 'வெற்றி அல்லது வீர மரணம் - வெற்றி அல்லது வீர மரணம்' என்று பறை சாற்றுவது போலிருந்தது!




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/161&oldid=1378863" இலிருந்து மீள்விக்கப்பட்டது