பக்கம்:கண் திறக்குமா.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


16. "தீனபந்து!"

சிவகுமாரனின் எதிர்பாராத மரணத்தாலும், செங்கமலத்தின் எதிர்பாராத பிரிவாலும் பாலுவின் உள்ளம் சமாதானம் அடைந்துவிடும் என்று நான் எதிர்பார்த்தேன்; அதற்குப் பதிலாக ஏற்கெனவே எரிமலைபோல் குமுறிக்கொண்டிருந்த அவன் உள்ளம் வெடித்தது. சிவகுமாரனின் மரணத்துக்கு யார் காரணமாயிருந்தாலும் செங்கமலத்தின் பிரிவுக்கு அவனே காரணம், அவனைப் பெற்றெடுத்த தந்தையே காரணம் என்று அவன் நினைத்தான். அதன் காரணமாக மேலும் மேலும் எழுச்சியடைந்த அவன் உள்ளத்தை வீழ்ச்சியடையச் செய்யும் திருப்பணியில் நான் இறங்கவில்லை ; 'நடப்பது நடக்கட்டும்' என்று பேசாமல் இருந்து விட்டேன்.

சித்ரா சொல்வதுபோல் தமிழ்நாட்டில்தான் ஏற்கெனவே வீரத்துக்குப் பஞ்சமாயிருக்கிறதே, அதை நான் ஏன் இன்னும் அதிகமாக்க வேண்டும்? பாரதந்தான் ஆன்ம ஞானம் தவிர மற்ற ஞானங்களுக்கெல்லாம் அந்நிய நாட்டானிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறதே.

அதை நான் ஏன் இன்னும் வளர்க்க வேண்டும்?

பாலுவின் நிலை இப்படியிருக்க, அவனுடைய சித்தியின் நிலையோ அதற்கு நேர் விரோதமாயிருந்தது. ஏனெனில் செங்கமலம் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் என்று அவள் நினைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/164&oldid=1379597" இலிருந்து மீள்விக்கப்பட்டது