பக்கம்:கண் திறக்குமா.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

163

கொள்ளலாமென்று இருந்தேன். இன்னொரு கவலை பக்க பலத்தைப் பற்றியது. அதில் இரண்டு விதங்கள் இருந்தன. ஒன்று மக்களின் பலம்; இன்னொன்று ஆண்டவனுக்கு இருக்கும் அடியார்களின் பலத்தைப் போன்றது. மக்களின் பலத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; அதை எழுத்தின் சக்தியைக் கொண்டே திரட்டிவிடலாமென்ற தைரியம் எனக்கு இருந்தது. ஆனால் அடியார்களின் பலத்தை எழுத்தின் சக்தியைக் கொண்டு திரட்டிவிட முடியாது; அதற்கு எடுத்ததற்கெல்லாம் முகஸ்துதி செய்யும் அபூர்வ குணம் வாய்த்திருக்க வேண்டும். அந்தக் குணம் என்ன காரணத்தினாலோ அடியேனுக்கு வாய்த்திருக்கவில்லை.

இதனால் மேற்படி தொழிலில் நான் வெற்றி காண முடியாது என்று பாரிஸ்டர் பரந்தாமன் ஒரு முறையல்ல, பல முறை சொன்னார். அதை நான் பொருட்படுத்தவில்லை; வீட்டை அடமானம் வைத்துப் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். அதைக் கொண்டு பத்திரிகை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன்.

கடைசியாக இதைக் கேள்விப்பட்ட பரந்தாமனார், "பத்திரிகைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தார்.

நான் அவரை வரவேற்று, "என்ன பெயர் வைத்தால் நன்றாயிருக்கும்?" என்று திருப்பிக் கேட்டேன்.

"அதுதானே எனக்குத் தெரியாது. பெயர் வைத்த பிறகு வேண்டுமானால், 'இது நன்றாயிருக்கிறது, அது நன்றாயில்லை' என்று சொல்வேன்."

"அதாவது, வீட்டைக் கட்ட மாட்டீர்கள்; கட்டிய பிறகு அழது சொல்வீர்கள் - அப்படித்தானே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/166&oldid=1378835" இலிருந்து மீள்விக்கப்பட்டது